Monday, August 10, 2015

களவு போகும் கல்வி துறை - தொடர் 1 - மு. நியாஸ் அகமது

களவு போகும் கல்வி துறை

 | தொடர் | 1
இனி உங்கள் குழந்தைகள் கிராக்கி என்று அழைக்கப்படுவார்கள்
- மு. நியாஸ் அகமது | nomadniya@gmail.com
உங்கள் குழந்தைகளை யாராவது கிராக்கி என்றழைத்தால் நீங்கள் மகிழ்வீர்களா... அது அப்படி ஒன்றும் கெட்ட வார்த்தை அல்ல. நல்ல உருது சொல் தான் - பொதுவாக ‘தேவை’யை குறிக்க இச்சொல் தமிழகத்தில் பயன்பட்டாலும், எங்கள் பகுதியில் வாடிக்கையாளர்களை குறிக்கவே அதிகம் இச்சொல் பயன்படுகிறது. இந்த சொல் உங்கள் செவிகளையும் கடந்து சென்றிருக்கும். சென்னைவாசியாக நீங்கள் இருந்தால் சாவு கிராக்கி என்ற சொல்லைக் கடக்காமல் வந்திருக்க மாட்டீர்கள். ஆனால் யாரும் தங்கள் குழந்தைகளை கிராக்கி என்றழைப்பதை விரும்பமாட்டார்கள். குழந்தைகளை உண்மையாக நேசிக்கும் பலர் அப்படி யாரேனும் அழைத்தால் நிச்சயம் அடிக்கக்கூட செல்வார்கள். ஆனால், உலக வர்த்தக அமைப்பு இனி உங்கள் குழந்தைகளை கிராக்கி என்று அழைக்க வேண்டும் என்கிறது. சரி, இனி எம் நாட்டில் குழந்தைகளை அப்படியே அழைக்கிறோம் எசமானே... என உறுதி அளித்து அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மேன்மை பொருந்திய இந்திய அரசும் உறுதி அளித்துள்ளது.
என்ன பிதற்றுகிறாய் என்கிறீர்களா...! இல்லை. இது வெற்று பிதற்றல் அல்ல, வார்த்தை அலங்காரத்துக்காகவோ, இல்லை கட்டுரையின் சுவாரஸ்யத்தை கூட்ட வேண்டும் என்பதற்காகவோ, நான் இதை சொல்லவில்லை. நூறு சதவீதம் உண்மை.
வர இருக்கும் பேராபத்தை புரிந்துக் கொள்ள, எனக்கும் கல்வியலாளர் மீனாட்சி உமேஷுக்கும் நடந்த உரையாடல் உங்களுக்கு உதவும் என நம்புகிறேன்.
கல்வியலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொது செயலாளராக இருக்கும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பிடமிருந்து எனக்கு இந்திய கல்வித் துறை சந்திக்கும் பிரச்சனைகள், அவர்கள் நடத்தும் கூட்டங்கள் குறித்து மின்னஞ்சல் வருவது வழக்கம். சேவை துறையில் வர்த்தகம் குறித்த ஒரு செய்தி அறிக்கையும் அப்படி தான் வந்தது. அந்த அறிக்கை முக்கியம் எனப் பட்டதால் அதனை மீனாட்சி உமேஷூக்கு அனுப்பினேன்.
மின்னஞ்சல் அனுப்பிய சில மணி நேரங்களில் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது.
“நியாஸ்... அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் மட்டும் நடைமுறைக்கு வந்தால், நிச்சயம்... நானும் மரணித்து எம் குழந்தைகளையும் கொன்று விடுவேன்” என்றார்.
எனக்கு தூக்கி வாரிப் போட்டது. நிச்சயம் இப்படி ஒரு எதிர்வினையை நான் எதிர்பார்க்கவில்லை. சிந்தித்து பார்த்தால் அவர்கள் சொன்னது சரித்தான் எனப்பட்டது. குழந்தைகளை உண்மையாக நேசிக்கும் அனைவரும் அப்படியொரு முடிவைத் தான் எடுப்பார்கள்.
அவ்வளவு ஆபத்துகள் கொண்டது அந்த ஒப்பந்தம்.
WTO - GATS ஒப்பந்தம்:
என்ன மிரட்டுகிறாய்....? பீடிகை போதும்... தெளிவாக கூறு என்று நீஙகள் சொல்வது கேட்கிறது.
இந்திய அரசு, உலக வர்த்தக அமைப்பின் (WTO) 160 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த கல்வி வணிகர்கள் இந்தியாவில் கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் பிறவகைத் தொழில் நுட்ப அல்லது தொழில் முறைக் கல்வி கழகங்களும் வணிக நிறுவனங்களாக அமைத்துக் கொள்வதற்கு இடமளிக்க முன் வந்துள்ளது. அதாவது சேவை துறையில் வர்த்தக உடன்படிக்கையில் (GATS) வரும் டிசம்பர் மாதம் கென்யா - நைரோபியில் நடைப்பெற இருக்கிற ‘அமைச்சர் நிலை சந்திப்பு’ கூட்டத்தில் இந்தியா கையெழுத்திட போகிறது. அப்படி கையெழுத்திடும் பட்சத்தில் இந்திய உயர் கல்வி துறை பெரும் சந்தையாக மாறி, உலக பெரும் முதலாளிகளின் வேட்டைக்காடாக மாறும். கட்டற்ற அந்நிய முதலீடு உள்ளே வரும். உயர் கல்வி துறை சேவை என்பதிலிருந்து மாறி முழு வணிகமாக மாற இது வழிவகுக்கும். உயர் கல்வி என்பது பண்டமாக மாறும் மாணவர்கள் நுகர்வோர் (கிராக்கி)களாக மாறுவார்கள்.
ஹோ... இவ்வளவு தானா... இதற்காக தான் இந்த பீடிகையா... இப்போது மட்டும் என்ன வாழ்கிறது இங்கே... உள்ளூர் கல்வி தந்தைகள் என்ன அறத்துடனா கல்வி நிலையங்களை நடத்துகிறார்கள்...? ஏற்கெனவே அது வியாபாரமாக மாறிவிட்டது...? உலக முதலாளிகள் வந்தால் என்ன... ? என்று அலுத்துக் கொள்ளும் நடுத்தர வர்க்கமா நீங்கள். இல்லை... நீ என்ன இடதுசாரியா...? உங்களுக்கு நாட்டின் வளர்ச்சியில் கொஞ்சம் கூட அக்கறை இல்லையா...? என்று அலுத்துக் கொள்ளும் உயர்த்தர வர்க்கமா நீங்கள்...?
பாராபட்சம் இல்லாமல் அனைவரும் இந்த ஒப்பந்தத்தால் பாதிப்படைய போகிறோம்.
அரசு கல்லூரிகள் இல்லாமல் போகும்:
முதலில் நடுத்தர வர்க்கத்தினரின் கேள்விக்கு வருகிறேன். நானும் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவன் தான். தனியார் கல்லூரியில் உதவி தொகையினால் படித்தவன். உங்கள் கோபம் நியாயமானது. இங்கு உயர் கல்வி முழு வியாபாரமாகி ஒரு தசாப்தத்திற்கு மேல் ஆகிறது. லட்சங்கள், கோடிகள் என எந்த வெட்கமும் இல்லாமல் கல்வி வியாபரம் கன ஜோராக நடக்கிறது. இது எதுவும் மறுப்பதற்கில்லை. ஆனால், இப்போதும் நமக்கு நம்பிக்கை அளிப்பதாக அரசு கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் மட்டுமே உள்ளன. அதன் உட்கட்டமைப்பு வசதி தரமற்றதாக, பாடத் திட்டங்கள் மேம்படுத்த வேண்டியதாக பேராசிரியர்கள் பற்றாகுறையாக இருக்கலாம். ஆயிரம் குற்றச் சாட்டுகள் இருந்தாலும் ஏழை, எளிய மக்கள் கல்வி பெறும் வாய்ப்பை அரசு கல்வி நிறுவனங்களே வழங்குகின்றன. அரசை தொடர்ந்து நிர்பந்திப்பதன் மூலம் அரசு கல்வி நிறுவனங்களை மேம்படுத்த முடியும்.
ஆனால் இந்த (WTO-GATS) ஒப்பந்தம் நிறைவேறும் பட்சத்தில், அரசு கல்லூரிகளுக்கான மானியம் வெட்டப்படும். அதன் தரம் மேலும் குறையும், கல்வி கட்டணம் எளியவர்கள் செலுத்த முடியாத அளவிற்கு அதிகரிக்கும். மெல்ல காலப்போக்கில், அரசு கல்லூரிகள் என்பதே இல்லாமற் போகும். நேரடியாக சொல்ல வேண்டுமானால், ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி மறைமுகமாக மறுக்கப்படும்.
ஏற்கெனவே, நம் நாட்டில் உயர் கல்வி துறையில் சமத்துவமின்மை நிகழ்கிறது. குறிப்பாக இந்தியாவில் 12 சதவீதத்திற்கு மட்டுமே ஏற்ற வயதில் உயர் கல்வி கிடைக்கிறது (தகவல் - Neo - Liberal assault on higher education). மேலும் இந்தியாவில் 8.15% மக்கள் மட்டுமே பட்டாதாரிகள். (தகவல்: http://www.thehindu.com/…/only-815-of-in…/article7496655.ece) இத்தகைய சூழலில் உயர் கல்வி துறையில் அந்நிய முதலீடு குவியும் பட்சத்தில், உயர் கல்வி என்பது ஏழைகளுக்கு எட்டா கனியாக மாறும்.
வளர்ச்சியை எதிர்க்கிறோமா...?
பணம் இருந்தால் கல்லூரிக்கே செல்லாமல் நம் நாட்டில் பட்டம் பெற முடியும் என்ற நிலைத்தான் இப்போது உள்ளது. இத்தகைய சூழலில் அந்நிய கல்வி நிறுவனங்கள் வந்தால் கல்வியின் தரம் நிச்சயம் உயரும் தானே... நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள்...? சரி... நீங்கள் எக்கேடாவது கெட்டுப் போங்கள் எங்களிடம் பணம் இருக்கிறது நாங்கள் படித்துக் கொள்கிறோம் என்று உயர் வகுப்பில் இருக்கும் நீங்கள் நினைத்தால் உங்களைவிட முட்டாள் யாரும் இல்லை.
கோபம் கொள்ளாதீர்கள். நீங்கள் நம்பும், போற்றும் உலக வங்கி 2000 ஆம் ஆண்டு ஓர் ஆய்வை செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன் சாரம், “A report of a survey by world bank in 2000 on foreign educational providers is on record stating that well - known universities of developed countries established low standard branches in backward countries"(தகவல் - All India Forum For RIght To Education Report). இதன் அர்த்தம் புரிகிறது அல்லவா... நன்கு அறியப்பட்ட வெளிநாட்டு பல்கலைகழகங்கள், பின் தங்கிய நாடுகளில் தரமற்ற கிளைகளையே நிறுவி உள்ளது.
இது தான் முதலாளித்துவத்தின் உண்மை முகம். அனைவரும் தரமான கல்விப் பெற வேண்டும் என்பது அவர்களின் நோக்கம் அல்ல, லாபம்... லாபம்... மேலும் லாபம் என்பது மட்டுமே அவர்களின் நோக்கம்
அந்நிய பல்கலைக் கழகங்கள் நம் நாட்டிற்கு வருவதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அறிவு பரிமாற்றத்திற்கு வருகிறதென்றால். அது நிச்சயம் வரவேற்க வேண்டிய ஒன்று. ஆனால், இந்த ஒப்பந்தம் இந்திய சந்தையை குறி வைத்து லாபநோக்கத்துடன் வருகிறது. அதாவது யார் வேண்டுமானாலும் கடை விரிக்கலாம், அது தரமானதா இல்லை தரமற்றதா என்ற எந்த நிபந்தனையும் இல்லை.
சந்தையின் அடிமைகள்:
என் பள்ளி கல்லூரி பருவத்து ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பெயர் அனைத்தும் எனக்கு இன்றும் நினைவில் உள்ளது. எனக்கு பள்ளி பாடம் எடுத்த லதா, ராதா, பீட்டர், சத்தியமூர்த்தி, சங்கர் போன்ற ஆசிரியர்கள் பாட திட்டத்தை தாண்டி பரந்துபட்டு யோசிக்கும் வெளியை திறந்துவிட்டார்கள். ஆசிரியர் - மாணவன் என்பதை தாண்டிய உணர்வு பூர்வமான பிணைப்பு இருந்தது.
ஆனால், இந்த ஒப்பந்தம் நிறைவேறுமானால் இந்த உறவு பிணைப்பு அறுப்படும். சந்தைக்கு தேவையான கல்வியை மட்டுமே போதிக்கும் ஆசிரியர்களிடமிருந்து எந்த பிணைப்பையும் எதிர்பார்க்க முடியாது. அதாவது நம் கல்வி துறை பெருங்குழும நிறுவனங்களுக்கு தேவையான அடிமைகளை உற்பத்தி செய்யும் கூடாரமாக மட்டுமே இருக்கும்.
எளிய உதாரணம், மான்சாண்டோ நிதி உதவியில் நம் பல்கலைகழகங்களில் செய்யப்படும் ஆராய்ச்சிகள் எதுவும் மக்களுக்கு பயன்படுவதாக இல்லாமல் பெருநிறுவனங்களை போஷாக்கு ஆக்குவதாகவே உள்ளது. மக்களுக்கு பயன் அளிக்காவிட்டாலும் பரவாயில்லை மக்களை அழிப்பதாகவே உள்ளது.
மான்சாண்டோ நிதி உதவி அளிக்கும் பல்கலைக்கழகங்களே இவ்வளவு அழிவை உண்டாக்கும் பட்சத்தில் மான்சாண்டோவே கல்வி நிறுவனம் தொடங்கினால்....?
நிச்சயம். இங்கு வரும் பல்கலைக் கழகங்கள் நம் சுய சிந்தனையை, தற்சார்ப்பை அழிக்கும்.
அதிகாரத்தை பரவலாக்கலை (decentralisation) பற்றி அனைவரும் பேசி வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் கல்வியை மையப்படுத்தவே உதவும். மைப்படுத்துதல் என்றால் ஒற்றை முதலாளிக்கு இயைவாக சிந்திக்க வைத்தல்.
ஏற்கெனவே நாம் என்ன உண்ண வேண்டும், எப்படி பல் துலக்க வேண்டும் என பெருநிறுவனங்களே முடிவு செய்கின்றன.இந்த ஒப்பந்தமும் நிறைவேறுமானால், நாம் என்ன சிந்திக்க வேண்டும் என்பதையும் நிறுவனங்களே முடிவு செய்யும். சுதந்திர சிந்தனை தடைப்படுவதை விட கேவலம் வேறு என்ன இருக்க முடியும்...?. நவீன அடிமைகளாகத்தான் இருக்க போகிறோமா...?
ஜனநாயகத்தின் மீதும், நாட்டின் எதிர் காலத்தின் மீதும் விருப்பம் கொண்டோர் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாமல் தடுக்க அழுத்தம் தர வேண்டும்.
அதற்கெல்லாம் மேலாக நம் குழந்தைகள் கிராக்கிகளாக்கிவிட கூடாது.

நன்றி :  மு. நியாஸ் அகமது

No comments:

Post a Comment