Wednesday, January 7, 2015

அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் - அமெரிக்க சதிகார கும்பல்கள்

  உலக அரசியல் - ஒரு தொடர் பார்வை 

அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் - அமெரிக்க சதிகார கும்பல்கள்


 பொதுவில் சந்தர்ப்பவாதமும், சரணடைவும் கோலோச்சும் இன்றைய அரசியல் வாழ்வில் என்ஜிவோக்கள் எனும் அரசு சாரா நிறுவனங்கள் அறிவையும், கலையையும், அரசியலையும் ஏகாதிபத்திய தொண்டூழியத்திற்கு ஏற்றதாக மாற்றி விட்டன.
அருந்ததி ராய் எழுதிய இந்தக் கட்டுரை இதை ஆணித்தரமாக நிறுவுகிறது. ராக்ஃபெல்லர் அறக்கட்டளை, ஃபோர்டு அறக்கட்டளை, லில்லி அறக்கட்டளை, பில்கேட்ஸ் அறக்கட்டளை உள்ளிட்ட அனைத்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் புரவலர்களும் என்ன செய்கிறார்கள்? இவர்களின் பணி கம்யூனிசத்தை முறியடிப்பதில் ஆரம்பித்து பின்னர் முதலாளித்துவத்தின் கொடூரங்களை மறைத்து நியாயப்படுத்தி, ஒட்டு மொத்தமாக இந்த உலகை அமெரிக்காவின் காலடியில் கிடத்துவதே  என்பதை ராய் தரவுகளுடன் எடுத்துரைக்கிறார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏவல் நாய்களாக, மூன்றாம் உலக நாடுகளின் மேட்டுக்குடி மற்றும்  கலை இலக்கியவாதிகளை   எலும்புத் துண்டு போட்டு வளர்க்கின்றன இந்த அறக்கட்டளைகள். 
பில்கேட்சின் அறக்கட்டளை கல்விக்கும், எய்ட்ஸ் ஒழிப்பிற்கும் நிதி உதவி அளிக்கிறது என்று எளிமைப்படுத்தி புரிந்து கொள்ளும் ‘அறிஞர்’கள், இதே பில்கேட்ஸ்தான் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை அதாவது ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக் கொள்கையை பரப்பும் கிளப்புகளில் உட்கார்ந்திருக்கிறார், அதற்காகவே இந்த பிச்சையை செய்து வருகிறார் என்பதை பார்ப்பதில்லை. இது பில்கேட்ஸுக்கு மட்டுமல்ல, ஃபோர்டு, ராக்பெல்லர் உள்ளிட்ட ஏனைய நிதி அறங்காவலர் நிறுவனங்களுக்கும் பொருந்தும். அந்த வகையில் அனைத்து அறக்கட்டளைகளும் ஏகாதிபத்தியத்தின் பசு வேடம் போர்த்திய டிராகுலாக்களே!
நோபல் பரிசு அமெரிக்க நலனுக்காக கொடுக்கப்படுகிறது என்றால், மகசேசே விருதை நேரடியாக அமெரிக்க அறக்கட்டளைகளே ஸ்பான்சர் செய்கின்றன. இந்த மகசேசே விருதை பத்திரிகையாளர் சாய்நாத், அண்ணா ஹசாரே, அரவிந்த கேஜ்ரிவால் உள்ளிட்டு பலரும் வாங்கியிருக்கின்றனர்.  என் ஜி வோக்களின் வலைப்பின்னலும், அதன் சதித்தனங்களும் யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பிரம்மாண்டமானவை. அந்த வகையில் இவர்கள் நம்மைப் போன்ற நாட்டு மக்களின் உரிமைப் போராட்டங்களுக்கு இழைத்து வரும் தீங்கும் அளவற்றவை.
ஆம் ஆத்மியோ, கூத்துப்பட்டறையோ, கிரண்பேடியின் தொண்டு நிறுவனமோ, ஜெர்மன் ஏகாதிபத்தியத்திடமிருந்த நிதியுதவி பெறும் இறந்து போன காந்தியவாதி ஜெகந்நாதனின் கிராம சுயராஜ்ஜிய இயக்கமோ (லாஃப்டி), ஹென்றி திபேனின் மனித உரிமை அமைப்போ, டாடாவுக்கு கலைச் சேவை புரிந்த லீனா மணிமேகலையோ, கலை இலக்கியத்திற்கு மட்டும் அமெரிக்க அறக்கட்டளைகளில் காசு வாங்கி நக்கலாம் என்று முழங்கும் ஜெயமோகனோ, குண்டு பல்பை தடை செய்யக் கோரும் சுற்றுச் சூழல் இயக்கங்களோ அனைவரும் அமெரிக்கா வடித்திருக்கும் ஏகாதிபத்திய நலனுக்காக உழைக்கின்றனர். 

கார்னஜி ஸ்டீல் கம்பெனியின் லாபத்தில் இருந்து 1911-ல் தொடங்கப்பட்ட கார்னஜி கார்ப்பரேஷன்தான் அமெரிக்காவின் முதல் அறக்கட்டளை. ஸ்டேண்டர்டு ஆயில் கம்பெனியின் நிறுவனர் ஜே.டி. ராக்பெல்லரால் 1914-ல் ராக்பெல்லர் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் தொடங்கப்பட்ட அறக்கட்டளைகளில் இதுவே முதன்மையானது. இவர்களே அந்தக் கால அமெரிக்காவின் டாடா, அம்பானிகள்.
ராக்பெல்லர் அறக்கட்டளையின் நிதி, துவக்க மூலதனம் (seed money) மற்றும் ஆதரவு பெற்ற நிறுவனங்கள் ஏராளம். ஐ.நா சபை, அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, அயலுறவு மன்றம் (சி.எஃப்.ஆர்), நியூயார்க்கின் நேர்த்திமிகு நவீன கலை அருங்காட்சியகம் மற்றும் ராக்பெல்லர் மையம் ஆகியவை அவற்றுள் சில.
1920-களில் அமெரிக்க முதலாளித்துவம் கச்சாப்பொருட்களுக்காகவும், சந்தைக்காகவும் பிற நாடுகளை நோக்கித் தமது பார்வையைத் திருப்பத் தொடங்கியது. அறக்கட்டளைகள் உலகளாவிய கார்ப்பரேட் ஆளுகை பற்றிய கருத்துருவாக்கத்தை செய்யத் தொடங்கின. அன்று, 1924-ல் ராக்பெல்லர் அறக்கட்டளையும், கார்னிஜி அறக்கட்டளையும் இணைந்து தொடங்கிய அயலுறவு மன்றம்தான் (சி.எஃப்.ஆர்) இன்று உலக நாடுகளின் அயலுறவுக் கொள்கைகள் மீது அழுத்தம் கொடுத்து தமக்கேற்ப வளைப்பதில் மிகவும் வலிமையான அமைப்பாக திகழ்கிறது. பின்னர் ஃபோர்டு அறக்கட்டளையும் அதற்கு நிதி அளிக்கத் தொடங்கியது. 1947-ம் ஆண்டு புதிதாகத் தொடங்கப்பட்ட அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ, அயலுறவு மன்றத்தின் ஆதரவைப் பெற்று அதனுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டது. காலப்போக்கில், சி.எஃப்.ஆர் உறுப்பினர் பட்டியலில் 22 அமெரிக்க அரசுச் செயலர்களும் இடம்பெற்றனர். 1943-ம் ஆண்டு ஐ.நா. சபையை நிறுவுவதற்கான வழிநடத்தும் கமிட்டியில் (steering committee) ஐந்து சி.எஃப்.ஆர் உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர். ஜே.டி. ராக்பெல்லர் அளித்த 8.5 மில்லியன் டாலர்கள் கொடையில் வாங்கிய நிலத்தில்தான் இன்று ஐ.நா.வின் நியூயார்க் தலைமையகம் நின்று கொண்டிருக்கிறது.
1946-ம் ஆண்டு முதல் உலக வங்கியின் தலைவர்களாக இருந்த ஏழைகளின் மீட்பர்களாக தம்மைக் காட்டிக் கொண்ட மொத்தம் பதினோரு பேருமே சி.எஃப்.ஆர் உறுப்பினர்கள்தான். (மேற்படி 11 பேரில் ஒரே விதிவிலக்கு ஜார்ஜ் உட்ஸ் மட்டுமே. இவரும் ராக்பெல்லர் அறக்கட்டளையின் ஒரு தாளாளராகவும், ராக்பெல்லருடைய சேஸ்-மன்ஹாட்டன் வங்கியின் துணைத் தலைவராகவும் இருந்தவராவார்).
உலகின் பொதுச் செலாவணியாக (reserve currency) அமெரிக்க டாலர்தான் இருக்க வேண்டும் என்றும், மூலதனத்தின் உலகளாவிய ஊடுருவலை விரிவாக்க, கட்டற்ற சந்தை செயல்பாட்டின் அடிப்படையில் அனைத்து நாடுகளின் வர்த்தக நடவடிக்கைகளையும் உலகளவில் பொதுமைப்படுத்தலுக்கும் தரப்படுத்தலுக்கும் உட்படுத்த வேண்டியது அவசியம் என்றும் உலக வங்கியும் ஐ.எம்.எஃப்பும் அமெரிக்காவின் பிரட்டன் வுட்ஸ் நகரத்தில் கூடி முடிவு செய்தன. இந்த இலக்கை அடைவதற்காகத்தான், சிறந்த அரசாளுமை அமைய உதவுவதற்கும் (மூக்கணாங்கயிறு தம் கையில் இருக்கும் வரை), சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் (சட்டம் இயற்றுவதில் தமக்கு அதிகாரம் உள்ளவரை), நூற்றுக்கணக்கான ஊழல் ஒழிப்புத் திட்டங்களை ஊக்குவிப்பதற்கும் (தங்கள் உருவாக்கியிருக்கும் ஆட்சி முறையை ஒழுங்கு செய்வதற்காக) அவர்கள் ஏராளமான பணத்தை வாரியிறைக்கிறார்கள். உலகிலேயே பெரியவையும் ரகசியமானவையும், தம் செயல்களுக்காக யாருக்கும் பதிலளிக்க வேண்டாதவையுமான இந்த இரண்டு நிறுவனங்கள்தான் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புணர்ச்சியையும் கோரி ஏழை நாடுகளின் அரசுகளிடம் மல்லுக்கட்டுகின்றன.
கிட்டத்தட்ட அனைத்து மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகளையும் உலக வங்கி வழிநடத்துகிறது. ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து நாடுகளையும் நிர்ப்பந்தித்து அவற்றின் சந்தையை சர்வதேச மூலதனத்திற்கு அகலத் திறந்து விட்டிருக்கிறது. இந்தச் சாதனைகளை எல்லாம் கணக்கில் கொண்டு பார்ப்பீர்களேயானால், தொலைநோக்கு கொண்ட வணிக நடவடிக்கைகள் அனைத்திலும் முதலிடம் வகிப்பது இந்த கார்ப்பரேட் தர்மகர்த்தா முறைதான் என்று நீங்கள் அறுதியிட்டுச் சொல்லிவிட முடியும்.
அமெரிக்க அயலுறவு மன்றத்துக்கு (சி.எஃப்.ஆர்) இணையான தேசங்கடந்த அமைப்பு, முத்தரப்பு ஆணையம் ஆகும். இந்த ஆணையம் 1973-ம் ஆண்டு டேவிட் ராக்பெல்லர், முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஸ்பிக்நியூ ப்ரிசென்ஸ்கி  (இவர் இன்றைய தாலிபான்களின் பாட்டன்களான ஆப்கான் முஜாகிதீன் அமைப்பின் நிறுவன-உறுப்பினர்), சேஸ் மன்ஹாட்டன் வங்கி மற்றும் சமூகத்தில் உயர்நிலை வகிக்கும் சில தனிநபர்கள் ஆகியோரைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. வட அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய மேட்டுக்குடிகளிடையே நீடித்து நிலைக்கும் நட்புறவையும், ஒத்துழைப்பையும் உருவாக்குவதே இதன் நோக்கமாகும். தற்போது சீனர்களும், இந்தியர்களும் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டு இது ஐந்தரப்பு ஆணயமாக மாற்றப்பட்டிருக்கிறது. (இந்திய தொழிற்கூட்டமைப்பின் தருண் தாஸ், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அலுவலர் (சி.இ.ஓ) என்.ஆர். நாராயணமூர்த்தி, கோத்ரெஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜாம்ஷெட் என். கோத்ரெஜ், டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஜாம்ஷெட் ஜெ இரானி மற்றும் அவந்தா குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் கௌதம் தபார் ஆகியோர் இதன் இந்தியப் பிரதிநிதிகள் ஆவர்.)
ஆசியாவின் சிறந்த சமூகத் தலைவர்களுக்கான ராமன் மக்சேசே பரிசை 1957-ல் ராக்பெல்லர் அறக்கட்டளை நிறுவியது. தெற்காசிய நாடுகளில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான அமெரிக்காவின் திட்டமிட்ட தொடர் நடவடிக்கைகளில் அதன் அத்தியாவசிய கூட்டாளியாக இருந்த பிலிப்பைன்ஸ் அதிபர் ராமன் மக்சேசேயின் நினைவாக இவ்விருதுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. பரிணமிக்கும் புதிய தலைமைக்கான ராமன் மக்சேசே விருதை 2000 ஆண்டில் ஃபோர்டு அறக்கட்டளை நிறுவியது. மக்சேசே விருது என்பது இந்தியக் கலைஞர்கள், செயல் வீரர்கள், சமூகத் தொண்டர்கள் மத்தியில் பெருமைக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. எம்.எஸ். சுப்புலெட்சுமியும் சத்யஜித் ரேயும் இவ்விருதை வென்றனர். அதுபோலவே ஜெயப்பிரகாஷ் நாராயண் மற்றும் மிகச் சிறந்த இந்திய இதழியலாளர்களில் ஒருவரான பி. சாய்நாத் ஆகியோரும் இவ்விருதுகளை வென்றிருக்கின்றனர். ஆனால், இந்த விருது இவர்களுக்குச் சேர்த்த பெருமையைவிட இவர்கள் இவ்விருதுக்குச் சேர்த்த பெருமையே அதிகம். பொதுவாக பார்க்குமிடத்து, எந்த விதமான செயல்முனைப்பு ‘ஏற்புடையது’ எது ‘ஏற்புடையதல்ல’ என்ற புரிதலை வழங்கும் ஒரு நாசூக்கான நடுவராகியிருக்கிறது இவ்விருது.
ஒரு வேடிக்கை என்னவென்றால்,  அண்ணா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் முன்னணித் தளபதிகளான அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கிரண் பேடி ஆகிய மூவருமே மக்சேசே விருது வென்றவர்கள். அரவிந்த் கெஜ்ரிவால் நடத்தும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் ஒன்று ஃபோர்டு அறக்கட்டளையில் இருந்து ஏராளமான நிதி பெறுகிறது. கிரண் பேடியின் தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்கு கொக்கோ-கோலா மற்றும் லேமன் பிரதர்ஸ் நிறுவனங்களால் நிதியளிக்கப்படுகிறது.

உலக மூலதனம் பாய்கின்ற பாதைகள் அனைத்திலும் மைய நரம்பு மண்டலத்தின் முடிச்சுக்கள் போல இந்த என்.ஜி.ஓக்கள் அமர்ந்திருக்கிறார்கள். செய்தி அனுப்புவோராக, சேகரிப்போராக, அதிர்வு தாங்கிகளாக, இப்பாதையில் ஏற்படும் ஒரு சிறிய துடிப்பைப் பற்றியும் எச்சரிப்பவராக, அதே சமயம் தமக்கு இடமளித்த நாடுகளின் அரசுகளுக்கு எரிச்சலூட்டக் கூடாது என்பதில் கவனம் நிறைந்தவர்களாக் என்.ஜி.ஓக்கள் பணி செய்கிறார்கள். (ஃபோர்டு அறக்கட்டளை மேற்படி செயல்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் பிரமாணப்பத்திரத்தில் நிதி பெறும் அமைப்புகளிடம் கையெழுத்து வாங்குகிறது.) இந்த என்.ஜி.ஓ-க்கள் தங்களது அறிக்கைகள், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் சேவை நடவடிக்கைகள் மூலமாக மென்மேலும் கடுமையாகி வரும் அரசுகளின் மென்மேலும் மூர்க்கமாகி வரும் உளவுத் துறையினரின் ஒட்டுக் கேட்கும் கருவிகளாக சில வேளைகளில் தெரிந்தும் சில வேளைகளில் தெரியாமலும் செயல்படுகிறார்கள். எந்த அளவுக்கு ஒரு பகுதி கலவரம் நிறைந்ததாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஏராளமான என்.ஜி.ஓ-க்கள் அதனை மொய்க்கிறார்கள்.
நர்மதா பள்ளத்தாக்கு பாதுகாப்புப் போராட்டம், கூடங்குளம் அணுவுலை எதிர்ப்புப் போராட்டம் போன்ற ஒரு உண்மையான மக்கள் இயக்கத்தின் மீது சேறடிப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட இந்த அரசோ, கார்ப்பரேட் செய்தி ஊடகங்களின் ஒரு பிரிவினரோ விரும்பும்போது, அவற்றை வெளிநாட்டில் இருந்து காசு வாங்கும் என்.ஜி.ஓ-க்கள் என்று நயவஞ்சகமான முறையில் அவதூறு செய்கிறார்கள். ஆனால், பெரும்பான்மையான என்.ஜி.ஓ-க்களுக்கு, அதிலும் குறிப்பாக ஏராளமான அன்னிய நிதி பெறும் என்.ஜி.ஓ-க்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடமை கார்ப்பரேட்டுகளின் உலகமயமாக்கத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதே அன்றி தடுத்து நிறுத்துவதல்ல என்பது இவர்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
கார்ப்பரேட் அறக்கட்டளைகளின் பண மூட்டைகளால் ஆயுதபாணியாக்கப்பட்ட இந்த என்.ஜி.ஓ-க்கள் உலகின் மூலை முடுக்கெல்லாம் சிரமப்பட்டு ஊடுருவியிருக்கின்றனர். புரட்சியாளர்களாக உருவாகும் ஆற்றல் கொண்டவர்களை சம்பளம் வாங்கும் களப்பணியாளர்களாக மாற்றினர். கலைஞர்கள், அறிவுஜீவிகள், மற்றும் திரைத்துறைக் கலைஞர்களை நிதியால் வருடிக்கொடுத்து, முற்போக்கான கருத்துகள், விவாதங்களில் இருந்து திசை திருப்பினர். அடையாள அரசியல், மனித உரிமைகள் எனும் மொழியில் முன்வைக்கப்படும் பன்மைப் பண்பாட்டுவாதம், பெண்ணியம், சமூக (சாதி) முன்னேற்றம் போன்ற கருத்தாக்கங்களை நோக்கி அவர்களை அழைத்துச் சென்றனர்.

நன்றி - வினவு   April 4, 2014





No comments:

Post a Comment