Sunday, March 10, 2019

வளைத்துப் போடும் வலையுலகம்:


வளைத்துப் போடும் வலையுலகம்:

POINT No 1:
நம்மில் பெரும்பாலானோர் ஏதாவது ஒரு சமயம் சார்ந்தவர்களாகவோ, சிலர் எந்த சமயமும் சாரதவர்களாகவோ இருந்து வருகிறோம். நாம் சமயம் சார்ந்தவர்களாக இருந்து கொண்டிருக்கிறோமோ தவிர சமயவாதியாக அதாவது ஆன்மீகவாதியாக நாம் முழுமையாக இல்லை வெகுசிலரைத் தவிர.

POINT No 2:
நம்மில் பெரும்பாலானோர் ஆன்ட்ராய்டு போனில் முகநூல், வாட்ஸ்அப், யூ-ட்யூப் போன்ற சமூக ஊடகங்களை உபயோகித்து வருகிறோம்.
இவை சமயம் சார்ந்த நமது வாழ்க்கையில் அமைதியையும், ஆரோக்கியத்தையும் எப்படி கெடுக்கின்றன என்பதை பார்ப்போம்.
மேலேக் குறிப்பிட்டுள்ள வகை சமூக ஊடகங்களை உபயோகித்து வரும் நாம் அதற்கு அடிமையாகி விட்டோம் என்று பலரும் சொல்வார்கள். இதனால் நேரமும், பணமும் மட்டுமே விரயமாகும். இது அவ்வளவு ஆபத்தானதில்லை. இதை விட பேராபத்து நம் எண்ணங்கள், நம் சிந்தனைகள் நம்மை அறியாமலேயே அடிமையாகி இருக்கிறது என்பதுதான். 

நீங்கள் எதை சிந்திக்க வேண்டும் என்பதை வேறொருவன் முடிவெடுக்கிறான் என்பதும், உங்களையும் அறியாமல் உங்கள் எண்ணங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பிறரால் வடிவமைக்கப்படுகின்றன என்பதும் உங்களுக்குத் தெரியமா?
             
இந்த உண்மையை புரிந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது கூகுள் போன்ற தேடு இயந்திரத்தில் (சர்ச் எஞ்சின்) உதாரணமாக “திராவிட அரசியலின் வெற்றி* போன்ற ஏதாவது ஒரு வார்த்தையை டைப் செய்து தேடுங்கள். பல செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் என்று வந்து கொட்டும். அதில் சில தளங்களுக்குச் சென்று பார்வையிடுங்கள். 

பிறகு வலைதளத்தைத் துண்டித்து விட்டு எல்லாவற்றையும் மறந்து விடுங்கள்.

பிறகு ஓரிரு நாட்களுக்குப் பிறகு மீண்டும் இணைய உலகிற்குள் நுழைந்து முகநூல், யூ-ட்யூப் போன்ற பக்கங்களுக்குள் பாருங்கள். இப்பொழுது திராவிட அரசியல் பற்றிய தகவல்கள், வீடியோக்கள் நீங்கள் தேடாமலேயே காட்சியளிக்கும். உங்கள் டேஸ்ட்- ருசி என்ன? என்பதை இணையம் கண்டு கொள்கிறது. 

மீண்டும் மீண்டும் அதே செய்திகள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டே இருக்கும். இப்பொழுது உங்களுக்கு உங்கள் கருத்தே உலகம் முழுக்க வியாபித்து இருக்கிறது போலத் தோன்றும். 

சில நாள்களில் உங்கள் பார்வையும், சிந்தனையும் திராவிட அரசியலின் வெற்றி பற்றிய தகவல்களுக்குள்ளேயே குறுகி விடும். அவர்கள் சொல்வதே சரி, மற்றவரெல்லாம் தவறானவர்கள்’ என்ற எண்ணம் உங்கள் ஆழ்மனதில் பதிந்து விடும். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்கக் கூட உங்கள் மனம் தயாராக இருக்காது. இவற்றைத் தாண்டி எதையும் உணர்ந்து கொள்ள முடியாது. 

இதுதான் உண்மை’ என்பதிலிருந்து இது மட்டுமே உண்மை’ என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடுவீர்கள்.
இப்பொழுது உங்கள் கருத்து என்பது உங்களுடையதல்ல

உங்கள் கருத்து பிறரால் வடிமைக்கப்பபட்டு விட்ட நிலைக்கு வந்து விட்டது. உங்களுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டு விட்டது என்ற நிலையில் நீங்கள் இப்பொழுது இருப்பீர்கள்.

இது மிகைப்படுத்திச் சொல்லப்படுவதாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால் மேலே உதாரணமாக சொன்னதை செய்து பாருங்கள். உண்மை என்று உணர்வீர்கள்.

நான் “திராவிட அரசியலின் வெற்றி என்று தேடச் சொன்னது ஒரு உதாரணத்திற்குத்தான். இதிலும் கூட பெரிய பாதிப்பில்லை. ஆனால் சமயம் சார்ந்த கருத்துக்கள், பிற சமயம் சார்ந்த எதிர் கருத்துக்கள் தாங்கி வரும் செய்திகள் ‘இது மட்டுமே உண்மை’ என்ற நிலைக்கு உங்களைக் கொண்டு வரும். 

இதே போல் நாம் சார்ந்திருக்கும் சமயம் / அரசியல் இயக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆர்வத்தோடு தேடும்போது பல நல்ல விஷயங்கள் கிடைக்கும். அவற்றில் சில உண்மையானதாகவும், சில தங்கள் கருத்துக்கு சாதகமாக திரிக்கப்பட்டதாக அல்லது விளக்கம் சொல்லப்பட்டதாக இருக்கும். இதனால் அவ்வளவாக எந்த தீங்கும் இருப்பதில்லை. 

ஆனால் பிற சமயம் / அரசியல் இயக்கங்களைப் பற்றித் தவறான, பொய்யான, திரிக்கப்பட்ட சில விஷயங்களும், எதிர் கருத்துக்களும் கிடைக்கும். அவற்றுக்குள் நாம் நுழைந்து விட்டால் அதன் பின், மீண்டும் மீண்டும் அது போன்ற செய்திகளே வந்து கொண்டே இருக்கும். நீங்கள் அதன் பின்னே செல்ல செல்ல அந்த மாய வலைக்குள் நீங்கள் சிக்கிக் கொள்வீர்கள்.

இங்கு எல்லா சமயங்களும் / அரசியல் இயக்கங்களும் தங்களுக்கென்று தங்கள் கருத்துக்களைச் சொல்ல இணைய தளங்கள் வைத்துக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். 

அதேபோல் அடுத்த சமயம் / அரசியல் இயக்கங்களைப் பற்றித் தவறான, திரிக்கப்பட்ட சில விஷயங்களைப் பரப்பவும் பல இணைய தளங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவிற்குள் வர்த்தகம் செய்வதற்காக வந்த கிழக்கிந்தியக் கம்பெனி நம் நாட்டை கைப்பற்ற பல வழிகளைக் மேற்கொண்டார்கள். நம் மக்களைக் கொண்டே நம் வளங்களை சுரண்டி, நம் நாட்டு மக்களையே தங்களின் படைக்குப் போர்வீரர்களாகக் கொண்டு ஆட்சி செய்தார்கள். அப்பொழுது அவர்கள் மேற்கொண்ட முக்கியமான திட்டம் “*பிரித்தாளும் சூழ்ச்சி*”. நம்மை மதத்தாலும், இனத்தாலும், மொழியாலும் பிரித்து எளிதில் நம்மை அடக்கி ஆண்டார்கள்.

அது இன்னமும் தொடர்கிறது. அதன் நீட்சியாகத்தான் நமக்குள் பகையை மூட்டிக் கொண்டே இருக்கிறார்கள். பிறரின் குறைகளைத் தோண்டித் துருவி எடுத்துக் காட்ட பல இணைய தளங்கள் நடத்தப்படுகின்றன. அவற்றை இயக்குவது மேலோட்டமான பார்வைக்கு அந்தந்த சமய / இயக்கங்களின் நிர்வாகிகள் தென்படுவார்கள். ஆனால் அவர்களை நியமிப்பதும், பின்னாலிருந்து நிர்வாகிப்பதும் யாரென்று *யாருக்குமே தெரியாது*. ஒருவொருக்கொருவர் வம்பிழுத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோள். உங்கள் கவனங்கள் திசை திருப்ப இவை போதும். அவர்கள் அவர்களுக்கான் காரியங்களை சாதித்துக் கொண்டே இருப்பார்கள்.

இப்படி அவர்கள் விரித்திருக்கும் “மாயவலை”க்குள் அகப்பட்டுக் கொண்ட நீங்கள் உணர்ச்சி வசப்படுவீர்கள்.

உங்களுக்கு வந்த செய்தியை அது உண்மையா, பொய்யா என்பதை அறியாமலே அடுத்தவருக்குக் கடத்துவீர்கள்.

அவர்களும் பொறுப்பாக அவர்கள் பங்குக்கு அந்தக் கருத்தை அடுத்தவருக்குக் கடத்துவார்கள். 

இப்படி ஒரு செய்தி ஒரு சமுதாயம் முழுக்க பரவும். நமக்குள் சண்டையும், சச்சரவும் பெருகும். 

இதனால் சமுதாயத்தில் அமைதி கெடுமென்பதை சொல்ல வேண்டியதில்லை. இதுதான் அவர்கள் எதிர்பார்ப்பது.

அவரவர் சமயத்தைப் பற்றி ஓரளவிற்காவது முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் அடுத்தவர் சமயங்களைக் குறை கூறி நமக்கு வந்த செய்திகளை நாம் பரப்புகிறோம். 

தவறாகத் திரிக்கப்பட்ட இத்தகைய செய்திகள் உங்களை சில சமயம் உணர்ச்சி வசப்பட வைக்கும். உங்கள் அமைதியைக் கெடுக்கும். உங்கள் மனம் அமைதியை இழந்தால், நிச்சயம் உங்கள் உடலின் ஆரோக்கியம் கெடும்.

அவரவர் கடவுளையும், கடவுளின் ஆலயங்களையும் ‘நாங்கள் காப்போம்என்று கூறிக் கொள்வது, இந்த பிரபஞ்சத்தையே படைத்து காப்பதாக நாம் நம்பும் கடவுளையும், கடவுளின் செயல்பாட்டையும் நாமே நம்பாதது போல் இருக்கிறது. வணங்கும் கடவுளையே அவமதிப்பது போன்றது.

இதனைத் தவிர்க்க நாம் என்ன செய்யலாம்?


1. உங்களுக்கு வரும் செய்திகளை அது *உண்மையானதா? அல்லது பொய்யானதா?* என்பதை வேறு பல இணய தளங்களுக்குச் சென்று ஆராயலாம். ஆனால் பலருக்கும் இது போன்ற தேடலுக்கான ஆர்வமோ, நேரமோ இருப்பதில்லை. அப்படி முடியாதவர்கள் தங்களுக்கு வந்த செய்தியை உறுதிப்படுத்தாமல் அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

2. உறுதியான செய்தியாக இருந்தாலும் அதனால் பொது சமுதாயத்திற்கு ஊறு விளைவிக்குமெனில் தங்களுக்குத் தாங்களே தணிக்கையாளர்களாக இருந்து அவற்றைப் பரப்புவதை தவிர்க்க வேண்டும். 

எறும்புகள் இனிப்பையும், உப்பையும் வைத்தால் இனிப்பை மட்டுமே எடுத்துச் செல்கின்றன. அவை தம் *உள்ளுணர்வு* சொல்லும் வழியில் செயல்படுகின்றன. ஆனால் நாமோ *பகுத்தறியும் புத்தி*யைக் கொண்டு நமக்குள் வழிகாட்டும் உள்ளுணர்வுக்கு மதிப்புக் கொடுக்காமல் தப்புத் தப்பாய் பல முடிவுகள் எடுத்து விடுகிறோம். *உள்ளுணர்வுக்கு மதிப்புக் கொடுத்து யோசித்தால் போதும்*.  

3. உங்களுக்கு காட்டப்படும் கருத்துகளுக்கு நேர் எதிரான கருத்துக்களை ‘சர்ச்’ என்னும் தேடு பொறியில் கொடுத்து தேடி உண்மைகளை அறியலாம். தொடர்ந்து நேர் எதிரான கருத்துக்களைத் தேட பிறகு அந்த கருத்துக்கள் உங்கள் திரைக்கு வர ஆரம்பிக்கும். நேர் எதிரான இன்னொரு உலகம் உங்களுக்கு புலப்படும்.

4. இவற்றை செய்ய முடியாதவர்கள், முகநூல், யூ-ட்யூப் பக்கங்களில் இது போன்ற செய்திகள் தென்பட்டால் அவற்றில் ஆர்வமோ, முக்கியத்துவமோ காட்டாமல் பகவத் ஐயா சொல்வது போல் வெறுமனே பார்வையாளராக இருந்து விட்டுப் போகலாம்.

நான் மட்டும் இதைச் செய்வதால் எல்லாம் சரியாகி விடுமா? என நினைக்காதீர்கள். 
’எண்ணம் போல் வாழ்க்கை” – தனி மனிதராக இருந்து ஹீலர் பாஸ்கர் நான்கைந்து வருடங்களுக்கு முன்னர் செக்கு எண்ணெயை உபயோகிக்கத் தூண்டினார். இன்று எங்கு பார்த்தாலும் செக்கு எண்ணெய் விளம்பரங்கள்.. அதன் உபயோகம் பெருகி விட்டது. இதற்கு பெரு முயற்சி செய்தவர் ஹீலர் பாஸ்கர்தான். ஆகவே தனி மனித முயற்சி என்பது சமுதாய மாற்றத்திற்கு அடித்தளம்.

“தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்” என்கிறார் திருவள்ளுவர்.

உலக அமைதிக்கு உண்மையாய் முயற்சிப்போம். 

வெற்றி பெறுவோம்.

வாழ்க வையகம்  வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment