Saturday, July 4, 2015

முதலாளிகளால் பராமரிக்கப்படும் ஊடகங்கள்!

முதலாளிகளால் பராமரிக்கப்படும் ஊடகங்கள்!

இந்த எல்லா பிரச்சனைகளையும் மக்களிடம் தெரியப்படுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இருக்கிற ஊடகங்களின் நிலை என்ன? இன்று அவர்களும் பெருமுதலாளிகள் கைபொம்மையாகத்தான் இருக்கிறார்கள். அனேக ஊடகங்கள் பெருமுதலாளிகளால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன, அம்பானி வசம் மட்டும் சுமார் நாற்பது சேனல்கள் இருக்கின்றன. மற்ற ஊடகங்களும் அவர்களது கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. நீங்கள் எதைப் பார்க்க வேண்டும் என்பதை அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். நாம் யாருக்காக அழவேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். அவர்கள் தீர்மானித்ததால்தான் நாம் நிர்பயாவுக்காக மெழுகுவர்த்தி ஏந்தினோம். அவர்கள் விரும்பியதால் அன்னா ஹசாரேவின் ஏழுநாள் உண்ணாவிரதத்தின் ”நியாயம்” நம் எல்லோரையும் வந்தடைந்தது. அவர்கள் விரும்பவில்லை, ஆகவே பத்து வருடமாக நடக்கும் இரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரதப்போராட்டம் நம் யாரையும் சலனப்படுத்தவில்லை. விற்பனைச் சரக்காக அவர்கள் செய்தியை மாற்றியது மட்டும் பிரச்சனை அல்ல, சுவாரஸ்யமான செய்தியை மட்டும் நாடும் இழிவான ரசிகனாக நம்மையும் மாற்றியிருக்கிறார்கள்.
இப்படி இந்திய அரசு அமைப்பின் எல்லா தரப்பும் சீரழிந்திருக்கிறது. அதனை கண்காணிக்கவும் தண்டிக்கவும் உள்ள அமைப்புக்கள் ஊழல்மயமாகிவிட்டன. சுருக்கமாக சொன்னால் இன்னதென்று குறிப்பிட்டு சொல்ல முடியாதபடி இந்திய ஜனநாயகத்தின் ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாமே புரையோடிப்போய் அழுகி நாற ஆரம்பித்திருக்கிறது. அது மக்களின் விவாதப் பொருளாவதை தவிர்க்கவே இந்த ஓட்டுப்போடும் புனிதக் காரியத்தின் மகிமைகளை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது விளம்பரம் செய்கிறார்கள்

இந்தியா இனியும் ஒரு நாடல்ல, அது ஒரு ஐஎன்சி  (INC) கம்பெனி – இங்கே வளர்ச்சி என்பது என்ன?
அரசு என்பது ராணுவம், போலீஸ் போன்ற துறைகளை மட்டும் வைத்திருந்தால் போதும் மற்ற எல்லாவற்றையும் எங்களுக்கு கொடு என்பதுதான் முதலாளிகளின் உத்தரவு. மக்கள் பிரதிநிதிகள் எனும் பெயரில் அரசியல் கட்சிகளினால் ஏற்படும் சிறிய அளவு தாமதத்தை தவிர்க்கவும் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய லஞ்சத்தின் அளவை குறைக்கவும் முதலாளிகள் “லெஸ் கவர்மெண்ட், மோர் கவர்னென்ஸ்” எனும் செயல் திட்டத்தை முன்மொழிகிறார்கள். அரசின் பங்கைக் குறை, அதிகாரிகளின் அதிகாரத்தை அதிகமாக்கு என்பதாக அதனை புரிந்துகொள்ளலாம். இங்கே அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த செயல்திட்டம்தான் அமுலுக்கு வரும். இந்த காரணிகள் அனைத்தையும் பரிசீலித்தால் நாம் சிக்கியிருக்கும் வலையின் எல்லா கண்ணிகளும் ஏகாதிபத்தியத்தோடு இணைக்கப்பட்டவை என்பது புலனாகும். இந்த அமைப்புக்குள் உருப்படியான மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அறவே இல்லை என்பதும் விளங்கும்.

இவை எல்லாவற்றுக்கும் மேல் நம் நாடு கணிசமான வளர்ச்சியை சந்தித்திருப்பதாக நம்ப வைக்கப்படுகிறோம். 
உண்மையில் இவை நமக்கு என்ன வளர்ச்சியை தந்திருக்கின்றன? சாலைகள் அகலமாகியிருக்கின்றன, ஆனால் இலவசமாக பயணித்த சாலைகளை பாவிக்க பணம் செலுத்த வேண்டிய நுகர்வோராக இன்று நாம் மாற்றப்பட்டு விட்டோம். சொந்த ஊரில் பிழைக்கும் வாய்ப்பு நம்மில் பெரும்பாலானோருக்கு இன்றில்லை. நாம் பெருநகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஓடுகிறோம். வட இந்திய பணியாளர்கள் நம் நகரங்களுக்கு வருகிறார்கள்.
பயணங்கள் இலகுவாகியிருக்கின்றன, ஆனால் அவை நமக்கு செலவு மிக்கதாகியிருக்கின்றன, அது தவிர்க்க இயலாததாகி நாம் நவீன நாடோடிகளாக வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கிறோம். வாழ்வின் இனிமையான பருவமாக கருதப்பட்ட குழந்தைப் பருவம் இன்றைய மாணவர்களுக்கு பெரும் சுமையாகவும் வெறும் போட்டியாகவும் மாறியிருக்கிறது. முன்பு தண்ணீர் விலைபொருளாக இருந்திருக்கவில்லை, அது அதிகபட்சமாக கோரியது உங்கள் உழைப்பை மட்டுமே. இன்று கிராமம் நகரம் என பாரபட்சமில்லாம் தண்ணீர் ஒரு விற்பனைப் பண்டம். கேன் தண்ணீர் கவர்ச்சிக்கு நாம் ஆட்படுத்தப்பட்ட வேளையில் அரசு தந்திரமாக குடிநீர் வழங்கும் கடமையில் இருந்து விலகிவிட்டது.
இன்று டிவியும் வாகனமும் இலகுவாக கிடைக்கிறது ஆனால் நாளைய நம் வேலை என்பது அனேகருக்கு உத்திரவாதமற்றதாக மாறிவிட்டது. பெரிய அதிநவீன மருத்துவமனைகள் எல்லா நகரங்களிலும் முளைக்கின்றன, ஆனால் மருத்துவம் ஏழைகளுக்கு கைக்கெட்டாததாக இருக்கிறது. சகல வசதிகளோடு இருக்கும் பள்ளி கல்லூரிகள் எல்லா இடங்களிலும் இன்று இருக்கின்றன, ஆனால் கல்விச்செலவானது நடுத்தர வர்க்க மக்களுக்குகூட பெருஞ்சுமையாய் மாறியிருக்கிறது.

இது முதலாளிகளுக்கான அரசு – ஆட்சி!

பட்ஜெட் போடும்போது விவசாயிகளையோ நெசவாளர்களையோ நமது நிதியமைச்சர்கள் ஆலோசனை செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆனால் எல்லா பட்ஜெட்டுக்கு முன்பும் முதலாளிகளோடு அவர்கள் ஆலோசனை செய்கிறார்கள். இந்தியாவுக்கு வந்த பில் கிளிண்டன் பாராளுமன்றத்தில் செலவிட்ட நேரத்தைவிட அம்பானி சகோதரர்களை சந்திக்க ஒதுக்கிய நேரம் அதிகம் என்பதை அறிவீர்களா? ஒரு சாமானிய மனிதன் பேருந்து நிலைய கழிப்பறையில் சிறுநீர் கழிக்கவே மூன்று ரூபாய் செலவழிக்கும் நாட்டில் ஒரு சதுர மீட்டர் விளைநிலம் ஒரு ரூபாய் விலையில் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது. அரை லிட்டர் பால் இருபது ரூபாய் விலையுடைய நாட்டில் நூறு ஏக்கர் தாதுமணல் சுரங்க நிலம் பதினாறு ரூபாய் ஆண்டு குத்தகைக்கு விடப்படுகிறது. உங்கள் தெருவில் உள்ள கடைக்காரர் திடீரென அரிசி விலையை இரண்டு மடங்காக்கினால் நாம் அமைதியாக இருப்போமா? அதே அண்ணாச்சி பக்கத்து தெருவுக்கு பழைய விலைக்கே அரிசி விற்றால் அவரை நீங்கள் விட்டுவைப்பீர்களா? இயற்கை எரிவாயு விலை விவகாரத்தில், எந்த இடையூறும் இல்லாமல் இதைத்தான் அம்பானி செய்கிறார்.
2ஜி ஊழல், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல், தாதுமணல் ஊழல் போன்ற எண்ணற்ற ஊழல்களின் அடிப்படை, முதலாளிகளுக்கு நாட்டின் செல்வம் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது என்பதுதான். இவற்றால் பலன் பெற்றவர்கள் எல்லோருமே டாடா, அம்பானி, அதானி, பிர்லா போன்ற  தரகு முதலாளிகள். இவர்கள் முறைகேடாக பெற்ற பணத்தை திரும்பப் பெற முடியாது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், இவர்களது அந்த ஆதாயத்துக்காக தரகு வேலை பார்த்த நீரா ராடியாவைக்கூட நம் அரசால் கைது செய்ய முடியாது என்பதுதான் யதார்த்தம். ஆக, அரசாங்கம் என்பது முதலாளிகளுக்காவே நடத்தப்படுகிறது. எல்லா ஊழல்களும் அந்த முதலாளிகளின் லாபத்துக்காகவே செய்யப்படுகின்றன. ஊழலின் மூலவர்கள் பாதுகாப்பாக இருக்கும் நாட்டில் ஊழலை மட்டும் எப்படி ஒழிக்க முடியும்?


நன்றி : வினவு வலைதளம்

No comments:

Post a Comment