Wednesday, July 29, 2015

பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: விளாசித்தள்ளிய சசி தரூர் உரை

பிரிட்டனுக்கு வேண்டும் குற்றவுணர்வு: விளாசித்தள்ளிய சசி தரூர் உரை

 

எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் சசி தரூர். 189 ஆண்டு பாரம்பரியம் மிக்க 'ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி'யில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆற்றிய உரைதான் இணைய உலகில் இந்த வாரத்தின் வைரல். பிரிட்டனால் காலனியாதிக்க நாடுகள் பலன் பெற்றனவா, சுரண்டப்பட்டனவா எனும் விவாதப் பொருளில் நடந்த விவாதம் அது. காலனியாதிக்கத்தால் பிரிட்டன் எவ்வளவு சுரண்டியது என்று பேச ஆரம்பித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தன்னுடைய 15 நிமிஷ உரையில், அன்றைய இந்தியாவை அப்படியே கண் முன் கொண்டுவந்த நிறுத்தியதோடு, பிரிட்டனின் சுரண்டல்களையும் அம்பலப்படுத்தினார்.
இணையத்தில் லட்சக்கணக்கானோரால், பார்க்கப்பட்ட / கேட்கப்பட்ட / பேசப்பட்ட சரி தரூரின் உரை இந்திய நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி வெளிப்படையாக சசி தரூரைப் பாராட்டினார்.
உலகின் 10-ல் 9 பங்கு நிலப்பரப்பை ஆக்ரமித்திருந்த மேற்கத்திய காலனியாதிக்க அராஜகங்களை இன்று நினைவுகூர்வது வெறும் வரலாற்றுப் பக்கங்களை புரட்டி பார்க்கும் நிகழ்வு மட்டும் அல்ல. ஒருவகையில், காலனியாதிக்கம் மீதம் விட்டுச்சென்றுள்ள ஆதிக்க மனோபாவங்கள், அரசியல் திட்டங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றை ஆய்வுக்குள்ளாக்குவதோடு தொடர்புடையது.
சசி தரூர் உரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான பகுதிகள் இவை:
* "எனக்கு 8 நிமிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 8 பேச்சாளர்களில் நான் 7-வதாக உரையாற்ற வந்துள்ளேன். ஏற்கெனவே மிக நீண்ட மாலைப்பொழுதாக உங்களுக்கு அமைந்துள்ள நிலையில், நான் 8-ம் ஹென்றியின் கடைசி மனைவியாக என்னை உணர்கிறேன். எதிர்த் தரப்பினர் காலனியாதிக்கத்தினால் நாடுகளின் பொருளாதாரம் சிறப்படைந்தது என்று முன்வைத்த கருத்தைக் கேள்விக்குட்படுத்த விரும்புகிறேன்.
* காலனியாதிக்கத்தின் மூலம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பொருளாதாரச் சூழ்நிலைகள் மோசமடைந்தன என்பதே உண்மை. பிரிட்டன் ஆதிக்கவாதிகள் இந்தியாவுக்குள் நுழையும்போது உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு 23%. பிரிட்டன் நாட்டைவிட்டு வெளியேறியபோது உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு 4%. இதைவிடச் சான்று வேண்டுமா?
* பிரிட்டனின் 200 ஆண்டு கால காலனியாதிக்கம் அவர்களது வளர்ச்சியை முன்னிறுத்தியே தொடர்ந்தது. பிரிட்டனின் வளர்ச்சியாக விதந்தோதப்படும் தொழிற்புரட்சி, இந்தியத் தொழில் துறையை அழித்ததன் மூலமே உருவானது.
* இந்தியாவின் பருத்தி உற்பத்தி நசுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு பிரிட்டன் பொருளாதாரம் வளர்ந்தது. கச்சாப் பொருட்களை இந்தியாவிலிருந்து கொள்ளை அடித்து பிரிட்டன் கொண்டுசென்று உற்பத்திசெய்து, ஆடைகளாக அவற்றை மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டுவந்து விற்றது பிரிட்டன். இதன் மூலம் இந்தியாவைத் தன் சந்தையாக்கியது. இந்திய நெசவாளர்கள் பிச்சைக்காரர்களாக மாறினர், உலகத் தரம் வாய்ந்த பருத்தி ஆடைகளின் ஏற்றுமதியாளராகக் கோலோச்சிய இந்தியா, இறக்குமதி நாடானது. உலக பருத்தி ஏற்றுமதியில் 27% பங்களிப்பு செய்த இந்தியாவின் ஏற்றுமதி 2% ஆகக் குறைந்தது.
* ராபர்ட் கிளைவ் இந்தியிலுள்ள 'லூட்' (கொள்ளை) எனும் சொல்லை ஆங்கில அகராதிக்கு அளித்தார். கூடவே கொள்ளையிடும் பழக்கத்தையும் பிரிட்டனுக்கு அளித்தார். அவரை 'கிளைவ் ஆஃப் இந்தியா' என்று பிரிட்டன் வர்ணித்தது, ஆனால், நாடே கிளைவின் கொடூர வலைப் பின்னல்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டது.
* 19-ம் நூற்றாண்டின் முடிவில் இந்தியா, பிரிட்டனின் மிகப் பெரிய கறவை மாடானது, பிரிட்டன் பொருட்களின் நுகர்வுச் சந்தையாக மாற்றப்பட்டது.
* பிரிட்டிஷ் அரசு ஊழியர்களுக்கு நாம் பெரிய அளவில் சம்பளம் கொடுத்தோம், எங்களை அடக்குமுறைக்கு உட்படுத்த நாங்களே கொடுத்துக்கொண்ட சம்பளம் அது.
* இந்த விவாத அரங்கில், ஏற்கெனவே குறிப்பிடப் பட்டதுபோல, செல்வ வளம் கொழித்த விக்டோரிய இங்கிலாந்தின் செல்வந்தர்கள், அடிமைப் பொருளாதாரத்தின் மூலமே தங்களது செல்வங்களை ஈட்டியுள்ளனர். அடிமைப் பொருளாதாரம் மூலம் ஐந்தில் ஒரு பங்கு இங்கிலாந்து மக்கள் பணக்காரர்களானார்கள்.
* 1833-ல் அடிமை முறை ஒழிக்கப்பட்டபோது இழப்பீடாக 20 மில்லியன் பவுண்டுகள் தொகை அளிக்கப்பட்டது. யாருக்குக் கொடுக்கப்பட்ட இழப்பீடு தெரியுமா இது? அடிமைச் சுரண்டல்களால் உயிரிழந்தவர்களுக்கோ, அடக்குமுறை துன்பம் அனுபவித்தவர்களுக்கோ அல்ல; அடிமை முறை ஒழிப்பினால் சொத்துகளை இழந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட இழப்பீடு இது.
* இந்த யூனியனின் வைஃபை கடவுச்சொல் கிளாட்ஸ்டோன் என்ற 'லிபரல் ஹீரோ'வாகக் கருதப்பட்டவரின் நினைவைக் கொண்டாடுவதற்காக வைக்கப்பட்டதாக அறிந்ததைக் கண்டு திகைத்தேன். காரணம் மேற்கூறிய 20 மில்லியன் பவுண்டுகள் இழப்பீட்டுத் தொகையால் பலன் அடைந்த குடும்பங்களில் அவருடையதும் ஒன்று.
* பிரிட்டிஷ் ஆட்சிக் காலப் பெரும் பஞ்சத்துக்கு 1.5 கோடி முதல் 2.9 கோடி மக்கள் மடிந்தனர். வங்காள வறட்சிக்கு மட்டும் 40 லட்சம் மடிந்தனர். காரணம், வின்ஸ்டன் சர்ச்சிலின் கொடூரமான கொள்கைகள். இரண்டாம் உலகப் போரின்போது அத்தியாவசியப் பொருட்கள் பிரிட்டன் ராணுவத்துக்காகப் பதுக்கப்பட்டன. இதற்கான உத்தரவைப் பிறப்பித்தவர் வின்ஸ்டன் சர்ச்சில். மக்கள் இந்தியாவில் உணவின்றிச் செத்து மடிகின்றனர் என்று ஓரளவு ஈரமுள்ள பிரிட்டன் அதிகாரிகள் சர்ச்சிலுக்கு எழுதினார்கள். அந்தக் கோப்பின் விளிம்பில் சர்ச்சில் எழுதினார்: "ஏன் காந்தி இன்னும் சாகவில்லை?"
* காலனியாதிக்க அனுபவம் மூலம் பெறப்பட்டதெல்லாம் வன்முறையும் நிறவெறியும் மட்டுமே. இதுதான் காலனியாதிக்க இயந்திரத்தின் நடைமுறை. பிரிட்டன் பேரரசில் சூரியன் அஸ்தமிக்கவில்லை என்று கூறப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை, காரணம், கடவுள்கூட ஆங்கிலேயர்களை இருட்டில் நம்பத் தயாராக இல்லை.
* இங்கு எனக்கு முன்னால் பேசிய எதிர்த் தரப்பாளர் அடக்குமுறையையும், இழப்பையும் எண்ணிக்கைக்குள் கொண்டுவர முடியாது என்றார். பல உதாரணங்களில் ஒன்றை நான் இங்கு குறிப்பிடுகிறேன்.. இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டன் படையில் ஆறில் ஒரு பங்கு இந்தியர்கள். 54,000 இந்தியர்கள் போரில் பலியாகியுள்ளனர். 65,000 பேர் காயமடைந்தனர். 4000 பேர் கதி என்னவென்று தெரியவில்லை; இவர்கள் சிறையில் இருந்திருக்கலாம்.
* இரண்டாம் உலகப் போருக்காக இந்திய வரிசெலுத்துவோர் அன்றைய மதிப்பின்படி 100 மில்லியன் பவுண்டுகளை இழந்தனர். இந்தியா 70 மில்லியன் ஆயுதங்களை வழங்கியது. 600,000 துப்பாக்கிகள், மற்றும் இயந்திரத் துப்பாக்கிகள் 42 மில்லியன் ஆடைகள் இந்தியாவிலிருந்து சென்றன. 13 லட்சம் இந்தியர்கள் இந்தப் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். இதோடு 173,000 விலங்குகள், 370 மில்லியன் டன்கள் பொருட்கள் அனுப்பப்பட்டன.
* இந்தியாவில் கடும் பஞ்சம் ஏற்பட்ட நிலையில் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட பொருட்களின் மதிப்பு இன்றைய மதிப்பின்படி 8 பில்லியன் பவுண்டுகள்.
* ஸ்காட்லாந்தை வறுமையிலிருந்து மீட்க இந்தியாவில் செய்த சுரண்டல்களே உதவின.
* காலனி ஆதிக்க நாடுகளில் பிரிட்டன் அரசு ரயில் பாதைகளையும் சாலைகளை அமைத்ததைப் பற்றிப் பிரமாதமாகப் பேசுகிறார்கள். பிரிட்டனின் தொழில் துறைத் தேவைகளுக்காக, கொள்ளைக்காகக் கொண்டுவரப்பட்டவைதான் ரயில்வேயும், சாலைகளுமே தவிர, உள்ளூர் மக்களின் பயன்பாடுகளுக்காக அல்ல. கச்சாப் பொருட்களை உள்ளூரிலிருந்து துறைமுகத்துக் கொண்டுசெல்ல வேண்டும். அதற்காகவே போக்குவரத்து பெரிதும் பயன்பட்டது.
* இந்தியாவில் ரயில்வேயை உருவாக்க பிரிட்டன் முதலீட்டாளர்களை அழைத்தபோது, இந்தியாவிலிருந்து கிடைக்கும் பெரிய தொகையை, அதாவது இந்திய வரிப்பணம் என்ற ஆசையையும், உத்தரவாதத்தையும் அளித்தது. இதனால் ஒரு மைல் தூர பால வேலைகள் நடக்க இரு மடங்கு செலவானது. அதாவது கனடாவிலோ, ஆஸ்திரேலியாவிலோ இந்தத் தொலைவுக்கு ஆகும் செலவைவிட இரு மடங்கானது. இந்தியப் பொதுமக்களைத் துன்பத்தில் ஆழ்த்தி, பிரிட்டன் தனியார் துறைகள் ரயில்வே, சாலைகள் திட்டம் மூலம் கொழுத்து வளர்ந்தன.
* ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி என்றெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சிபற்றிப் பேசப்படுகிறது. சித்ரவதைகள், சுரண்டல்கள், அடக்குமுறைகள், வன்முறைகள்… இப்படி 200 ஆண்டு காலம் ஓட்டிவிட்டு எல்லாம் முடிந்ததும் 'ஜனநாயகம்' பற்றி எப்படிப் பேச முடிகிறது என்று தெரியவில்லை. எங்களுக்கு ஜனநாயகம் மறுக்கப்பட்டது. அதை நாங்கள் உங்களிடமிருந்து பறிக்கப் போராட வேண்டியதாக இருந்தது.
* இவற்றையெல்லாம் மீறி பிரிட்டன், இந்தியாவுக்கு நிதியுதவி அளித்தது என்று பேசப்படுகிறது. ஆம் உதவி அளிக்கப்பட்டது. எவ்வளவு அளிக்கப்பட்டது? அந்த உதவியை எங்கள் உள்நாட்டு உற்பத்தி மதிப்புடன் ஒப்பிட்டால், வெறும் 0.4%. நாங்கள் உரங்களுக்குக் கொடுக்கும் மானியம் மட்டும் இதைவிடப் பல மடங்கு அதிகமானது.
* இதற்கெல்லாம் பிரிட்டன் கடன்பட்டிருக்கிறது என்றும் அதற்கான நிதி இழப்பீடு எவ்வளவு என்றெல்லாம் இந்த விவாதத்தில் பேசப்பட்டது. ஆனால், காலனியாதிக்க காலத்தில் எம் மக்கள் அனுபவித்த பயங்கரங்களுக்கு எந்தத் தொகை ஈடாகும்? வீட்டுக்குள் நுழையும் கொள்ளைக்காரர் வீட்டைச் சூறையாடிவிட்டுச் செல்லும் போது சூறையாடிவிட்டுச் செல்லும் போது அவர் காலில் காயம் பட்டு விட்டது என்றால், இருதரப்பிலும் 'தியாகங்கள்' இருக்கின்றன என்ற வாதம் அறரீதியாக சரியானதாக இருக்க முடியுமா?
* பிரிட்டன் கடன்பட்டிருக்கிறது என்பதைக் கொள்கை ரீதியாக ஒப்புக்கொள்ள ஒரு 'மன்னிப்பு' போதும். அதை விடுத்து நிதியுதவி, இழப்பீடு என்ற வாதங்களை ஏற்க முடியாது. ஆனால் 'நாம் கடன்பட்டிருக்கிறோம்' என்ற குற்ற உணர்வு வேண்டும்!"
- தொகுப்பும் மொழியாக்கமும்: ஆர்.முத்துக்குமார்

 நன்றி : Return to frontpage 26.07.2015

Saturday, July 4, 2015

முதலாளிகளால் பராமரிக்கப்படும் ஊடகங்கள்!

முதலாளிகளால் பராமரிக்கப்படும் ஊடகங்கள்!

இந்த எல்லா பிரச்சனைகளையும் மக்களிடம் தெரியப்படுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இருக்கிற ஊடகங்களின் நிலை என்ன? இன்று அவர்களும் பெருமுதலாளிகள் கைபொம்மையாகத்தான் இருக்கிறார்கள். அனேக ஊடகங்கள் பெருமுதலாளிகளால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன, அம்பானி வசம் மட்டும் சுமார் நாற்பது சேனல்கள் இருக்கின்றன. மற்ற ஊடகங்களும் அவர்களது கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. நீங்கள் எதைப் பார்க்க வேண்டும் என்பதை அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். நாம் யாருக்காக அழவேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். அவர்கள் தீர்மானித்ததால்தான் நாம் நிர்பயாவுக்காக மெழுகுவர்த்தி ஏந்தினோம். அவர்கள் விரும்பியதால் அன்னா ஹசாரேவின் ஏழுநாள் உண்ணாவிரதத்தின் ”நியாயம்” நம் எல்லோரையும் வந்தடைந்தது. அவர்கள் விரும்பவில்லை, ஆகவே பத்து வருடமாக நடக்கும் இரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரதப்போராட்டம் நம் யாரையும் சலனப்படுத்தவில்லை. விற்பனைச் சரக்காக அவர்கள் செய்தியை மாற்றியது மட்டும் பிரச்சனை அல்ல, சுவாரஸ்யமான செய்தியை மட்டும் நாடும் இழிவான ரசிகனாக நம்மையும் மாற்றியிருக்கிறார்கள்.
இப்படி இந்திய அரசு அமைப்பின் எல்லா தரப்பும் சீரழிந்திருக்கிறது. அதனை கண்காணிக்கவும் தண்டிக்கவும் உள்ள அமைப்புக்கள் ஊழல்மயமாகிவிட்டன. சுருக்கமாக சொன்னால் இன்னதென்று குறிப்பிட்டு சொல்ல முடியாதபடி இந்திய ஜனநாயகத்தின் ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாமே புரையோடிப்போய் அழுகி நாற ஆரம்பித்திருக்கிறது. அது மக்களின் விவாதப் பொருளாவதை தவிர்க்கவே இந்த ஓட்டுப்போடும் புனிதக் காரியத்தின் மகிமைகளை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது விளம்பரம் செய்கிறார்கள்

இந்தியா இனியும் ஒரு நாடல்ல, அது ஒரு ஐஎன்சி  (INC) கம்பெனி – இங்கே வளர்ச்சி என்பது என்ன?
அரசு என்பது ராணுவம், போலீஸ் போன்ற துறைகளை மட்டும் வைத்திருந்தால் போதும் மற்ற எல்லாவற்றையும் எங்களுக்கு கொடு என்பதுதான் முதலாளிகளின் உத்தரவு. மக்கள் பிரதிநிதிகள் எனும் பெயரில் அரசியல் கட்சிகளினால் ஏற்படும் சிறிய அளவு தாமதத்தை தவிர்க்கவும் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய லஞ்சத்தின் அளவை குறைக்கவும் முதலாளிகள் “லெஸ் கவர்மெண்ட், மோர் கவர்னென்ஸ்” எனும் செயல் திட்டத்தை முன்மொழிகிறார்கள். அரசின் பங்கைக் குறை, அதிகாரிகளின் அதிகாரத்தை அதிகமாக்கு என்பதாக அதனை புரிந்துகொள்ளலாம். இங்கே அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த செயல்திட்டம்தான் அமுலுக்கு வரும். இந்த காரணிகள் அனைத்தையும் பரிசீலித்தால் நாம் சிக்கியிருக்கும் வலையின் எல்லா கண்ணிகளும் ஏகாதிபத்தியத்தோடு இணைக்கப்பட்டவை என்பது புலனாகும். இந்த அமைப்புக்குள் உருப்படியான மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அறவே இல்லை என்பதும் விளங்கும்.

இவை எல்லாவற்றுக்கும் மேல் நம் நாடு கணிசமான வளர்ச்சியை சந்தித்திருப்பதாக நம்ப வைக்கப்படுகிறோம். 
உண்மையில் இவை நமக்கு என்ன வளர்ச்சியை தந்திருக்கின்றன? சாலைகள் அகலமாகியிருக்கின்றன, ஆனால் இலவசமாக பயணித்த சாலைகளை பாவிக்க பணம் செலுத்த வேண்டிய நுகர்வோராக இன்று நாம் மாற்றப்பட்டு விட்டோம். சொந்த ஊரில் பிழைக்கும் வாய்ப்பு நம்மில் பெரும்பாலானோருக்கு இன்றில்லை. நாம் பெருநகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஓடுகிறோம். வட இந்திய பணியாளர்கள் நம் நகரங்களுக்கு வருகிறார்கள்.
பயணங்கள் இலகுவாகியிருக்கின்றன, ஆனால் அவை நமக்கு செலவு மிக்கதாகியிருக்கின்றன, அது தவிர்க்க இயலாததாகி நாம் நவீன நாடோடிகளாக வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கிறோம். வாழ்வின் இனிமையான பருவமாக கருதப்பட்ட குழந்தைப் பருவம் இன்றைய மாணவர்களுக்கு பெரும் சுமையாகவும் வெறும் போட்டியாகவும் மாறியிருக்கிறது. முன்பு தண்ணீர் விலைபொருளாக இருந்திருக்கவில்லை, அது அதிகபட்சமாக கோரியது உங்கள் உழைப்பை மட்டுமே. இன்று கிராமம் நகரம் என பாரபட்சமில்லாம் தண்ணீர் ஒரு விற்பனைப் பண்டம். கேன் தண்ணீர் கவர்ச்சிக்கு நாம் ஆட்படுத்தப்பட்ட வேளையில் அரசு தந்திரமாக குடிநீர் வழங்கும் கடமையில் இருந்து விலகிவிட்டது.
இன்று டிவியும் வாகனமும் இலகுவாக கிடைக்கிறது ஆனால் நாளைய நம் வேலை என்பது அனேகருக்கு உத்திரவாதமற்றதாக மாறிவிட்டது. பெரிய அதிநவீன மருத்துவமனைகள் எல்லா நகரங்களிலும் முளைக்கின்றன, ஆனால் மருத்துவம் ஏழைகளுக்கு கைக்கெட்டாததாக இருக்கிறது. சகல வசதிகளோடு இருக்கும் பள்ளி கல்லூரிகள் எல்லா இடங்களிலும் இன்று இருக்கின்றன, ஆனால் கல்விச்செலவானது நடுத்தர வர்க்க மக்களுக்குகூட பெருஞ்சுமையாய் மாறியிருக்கிறது.

இது முதலாளிகளுக்கான அரசு – ஆட்சி!

பட்ஜெட் போடும்போது விவசாயிகளையோ நெசவாளர்களையோ நமது நிதியமைச்சர்கள் ஆலோசனை செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆனால் எல்லா பட்ஜெட்டுக்கு முன்பும் முதலாளிகளோடு அவர்கள் ஆலோசனை செய்கிறார்கள். இந்தியாவுக்கு வந்த பில் கிளிண்டன் பாராளுமன்றத்தில் செலவிட்ட நேரத்தைவிட அம்பானி சகோதரர்களை சந்திக்க ஒதுக்கிய நேரம் அதிகம் என்பதை அறிவீர்களா? ஒரு சாமானிய மனிதன் பேருந்து நிலைய கழிப்பறையில் சிறுநீர் கழிக்கவே மூன்று ரூபாய் செலவழிக்கும் நாட்டில் ஒரு சதுர மீட்டர் விளைநிலம் ஒரு ரூபாய் விலையில் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது. அரை லிட்டர் பால் இருபது ரூபாய் விலையுடைய நாட்டில் நூறு ஏக்கர் தாதுமணல் சுரங்க நிலம் பதினாறு ரூபாய் ஆண்டு குத்தகைக்கு விடப்படுகிறது. உங்கள் தெருவில் உள்ள கடைக்காரர் திடீரென அரிசி விலையை இரண்டு மடங்காக்கினால் நாம் அமைதியாக இருப்போமா? அதே அண்ணாச்சி பக்கத்து தெருவுக்கு பழைய விலைக்கே அரிசி விற்றால் அவரை நீங்கள் விட்டுவைப்பீர்களா? இயற்கை எரிவாயு விலை விவகாரத்தில், எந்த இடையூறும் இல்லாமல் இதைத்தான் அம்பானி செய்கிறார்.
2ஜி ஊழல், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல், தாதுமணல் ஊழல் போன்ற எண்ணற்ற ஊழல்களின் அடிப்படை, முதலாளிகளுக்கு நாட்டின் செல்வம் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது என்பதுதான். இவற்றால் பலன் பெற்றவர்கள் எல்லோருமே டாடா, அம்பானி, அதானி, பிர்லா போன்ற  தரகு முதலாளிகள். இவர்கள் முறைகேடாக பெற்ற பணத்தை திரும்பப் பெற முடியாது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், இவர்களது அந்த ஆதாயத்துக்காக தரகு வேலை பார்த்த நீரா ராடியாவைக்கூட நம் அரசால் கைது செய்ய முடியாது என்பதுதான் யதார்த்தம். ஆக, அரசாங்கம் என்பது முதலாளிகளுக்காவே நடத்தப்படுகிறது. எல்லா ஊழல்களும் அந்த முதலாளிகளின் லாபத்துக்காகவே செய்யப்படுகின்றன. ஊழலின் மூலவர்கள் பாதுகாப்பாக இருக்கும் நாட்டில் ஊழலை மட்டும் எப்படி ஒழிக்க முடியும்?


நன்றி : வினவு வலைதளம்