Monday, October 26, 2015

சினிமாவை வெறும் சினிமாவாக பாருங்க

அவர்கள் மொன்னைகளல்ல...

சினிமாவை வெறும் சினிமாவாக மட்டுமே பார்த்துட்டு போங்க…அதுக்குமேல் அதுல எதையும் தேடாதீங்க… என்கிற போதனைகளில் எனக்கு உடன்பாடுமில்லை… நம்பிக்கையுமில்லை. 

சினிமாவை ஒரு பண்பாட்டுச் சாதனமாகவே நான் பார்க்கிறேன்.

குடும்பம்,கல்வி, மதங்கள்,சாதி போன்றவை எப்படி நமது பண்பாட்டை வடிவமைக்கின்றனவோ, அதுபோலவே சினிமாவும் நமது பண்பாட்டை வடிவமைக்கிறது என்பதை நான் மெய்யாகவே உணர்கிறேன்.

அந்தப்புரிதலிலிருந்தே சினிமாவை நான் துய்க்கிறேன். 
சினிமா அறிமுகமாவதற்கு முன் கலைஇலக்கியவடிவங்கள் அந்த வேலையை செய்தன… இப்போதும் செய்கின்றன. ஆனாலும் வலிமைமிக்க ஊடகமான சினிமா அந்த பண்பாட்டுப்பணியை இன்னும் திருத்தமாகவும் அழுத்தமாகவும் நமக்குள் செயல்படுத்துகிறது. காலத்திற்கேற்ப மக்களின் மனங்களை அவை தகவமைக்கின்றன.. நல்ல விதமாகவோ..மோசமாகவோ. முற்றிலும் வணிகமயமான சினிமா, அதன் வணிக நோக்கத்திற்காகவே இந்த தகவமைப்பில் ஈடுபடுகின்றன. அந்த வணிக நோக்கம் அப்பட்டமாக பல்லிளித்துவிடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது கொஞ்சம் அருள் பார்வையையும் பார்வையாளன்மீது திருப்புகின்றன.

நிற்க. கத்திக்கு வருவோம். கார்ப்பரேட்டுகளின் தண்ணீர் கொள்ளையை பற்றி பேசுகிறது இந்தப்படம். படத்தில் நடித்தவர் கார்ப்பரேட்டுகளின் குளிர்பான விளம்பரத்தில் நடித்து கோக் குடிக்க பரிந்துரைத்தவர். படத்தை தயாரித்தது ஒரு கார்ப்பரேட் நிறுவனம்.அதை இயக்கியவர் கார்ப்பரேட் நிறுவனத்தின் உதவியுடன் படங்கள் தயாரிப்பவர் இந்திய கார்ப்பரேட்டுகளின் ஆசைக்காக ”ஏழாம் அறிவை”க்கூட பயன்படுத்துபவர். இவர்களெல்லாம் சேர்ந்துதான் கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக படம் எடுத்திருக்கிறார்கள். ஆடு நனையுதேன்னு ஓநாய்கள் அழுத கதைதான் போங்கள்.இருக்கட்டும்.
கதை என்ன சொல்கிறது. கம்யூனிசத்திற்கு நள்ளிரவிலும்கூட விளக்கம் அளிக்கும் அளவுக்கு அறிவு கொண்டவர், பூமிக்கடியில் இருக்கும் தண்ணீரை கண்டுபிடிக்கும் அளவுக்கு விஞ்ஞானம் படித்தவர், ஊர் மக்களின் துயரம் கண்டு சகித்துக் கொள்ளமுடியாதவர், விளைநிலங்கள் வீணாய் போவதைக்கண்டு பொங்கி எழும் ஒரு இளைஞர் நேர்வழியில் செய்யமுடியாததை… 18 முறை சிறையிலிருந்து தப்பித்த ஒரு குற்றவாளி செய்துமுடிப்பார் என்பதுதான் கதை.
கம்யூனிசமெல்லாம் பேசத்தான் நல்லாயிருக்கும்.வேலைக்கு ஆகாது..கத்திகபடா எடுப்பதுதான் சரிப்பட்டுவரும் என சொல்றாங்களோ. அந்த பலே ஆள் என்ன வேண்டுமானாலும் செய்வார். 50 பேரை அரையிருட்டிலேயே அடித்து காலி செய்வார். ஆள் மாறாட்டம் செய்வார். நீதிபதியின் தோளில் கைபோட்டு தனக்கு சாதகமாக தீர்ப்பளிக்கச்சொல்லி மிரட்டுவார்.அதெல்லாம் கண்டுக்கக்கூடாது. அதையே வில்லன் செய்தால் தப்பு. கதாநாயகன் செய்தால் ரைட்டோ.. கட்டக்கடைசியில் பத்து நிமிடம் வீரமாக பேசுவார். அப்போதும்கூட கோககோலா என முழுசாக சொல்லமாட்டார். கோலா என சொன்னால் நாம் புரிந்து கொள்ளவேண்டும். அலைக்கற்றையை பேசுவார்..சொத்துகுவிப்பை மறந்துவிடுவார். நாம்.. அட போங்கப்பா.. இதுவாச்சும் பேசினாரேன்னு பொங்கி எழுந்து கொண்டாடிக் கொள்ளவேண்டும்.

சரி விடுங்க..திடீர்னு எதுக்கு இந்த கார்ப்பரேட்டுகளின் கதை. கார்ப்பரேட்டு கம்பெனிகளின் அட்டகாசத்தை மக்கள் உணரத்துவங்கியிருக்கிறார்கள். மவுலிவாக்கம் சம்பவங்களை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தங்கள் கிராமங்களில் கார்ப்பரேட்டுகளின் கனரக இயந்திரங்கள் வலம்வருவதை அவர்கள் மவுனமாக பார்த்துக்கொண்டு இல்லை. அவர்களுக்கு எதிரான கோபம் ஒரு நெருப்பு உருண்டையாய் அடிவயிற்றில் சூல்கொள்ள துவங்கியிருக்கிறது. இடதுசாரி இயக்கங்களும் நம்மாழ்வார்களும் இன்னமுள்ள இயற்கை ஆர்வலர்களும் பேசும் குரல்களுக்கு கவனம் குவிக்கத்துவங்கியிருக்கிறார்கள். அந்தக்கோபம் போராட்டமாய் வெடித்துவிடக்கூடாது என்ற கார்ப்பரேட்டுகளின் கவலையைத்தான் ஒரு கை தண்ணி அள்ளி தெளித்து அணைக்க முயற்சிக்கிறார்கள்.
திருடன்..திருடன்..என கத்திக்கொண்டு வரும் கூட்டத்தை..தெருமுக்கில் நின்று..ஆமாமாம்..அதோ ஓடுறான் பாரு என திசைத்திருப்பிவிடத்தான் இப்படி ஹைடெக்காக யோசித்து படமெடுத்து இருக்கிறார்கள். மற்றபடி இதுவும் திருடனை தியாகி ஆக்கும் கதைகளில் ஒன்றுதான். என்ன இந்தமுறை விஜய் தியாகியாகி இருக்கிறார்…அவ்வளவுதான்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் விஜய்..முருகதாஸ். சர்வ சாதாரணமாக ஓர் ஆட்டோவில் போய் இறங்கி சவால்விட்டு வண்டிச்சக்கரத்து அச்சாணியில் குத்தி தீர்த்துவிடக்கூடிய அளவுக்கு கார்ப்பரேட்டுகளின் வலைப்பின்னல் ஒன்றும் அவ்வளவு சாதாரணமானதல்ல. தவிர, உங்களையும் எங்களையும் இதைச்செய்ய அனுமத்தித்துவிடும் அளவுக்கு கார்ப்பரேட்டுகள் ஒன்றும் மொன்னைகளல்ல...

நன்றி : கருப்பு கருணா 25.10.2015 முக நூலிலிருந்து 

இதில்  கார்ப்பரேட்டுகள் என சொல்லப்படுபவர்கள் யார் என்பது முந்தைய பதிவுகளை படித்தவர்கள் புரிந்து கொள்ளலாம் 

Tuesday, September 15, 2015

வணிகமயமாகும் கல்வி

 வணிகமயமாகும் கல்வி 

இதுவும் இல்லுமினாட்டிகளின் கை வண்ணமே 

இந்தக் கட்டுரையை வாசியுங்கள்.
நம் நாட்டில் குருகுலங்களிலும், மதரஸாக்களிலும் சிறந்து விளங்கி கொண்டிருந்த கல்வியை எவ்விதம் கைப்பற்றி இருக்கிறார்கள், இன்னும் எப்படி செய்யப் போகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,


நமது நாட்டில் உயர் கல்வியை வணிகமயப்படுத்தும் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருகின்றன. 'அதுதான் ஏற்கனவே மாறிவிட்டதே' என சலிப்படையாதீர்கள். கல்வித் துறை தற்போதைய நிலையைவிட படுமோசமாக மாறவிருக்கிறது.

ஒரு கல்லூரியை நாம் எப்படி தரமதிப்பீடு செய்வோம். முதலாவது, என்ன பாடங்கள் அங்கே கற்றுத்தரப்படுகின்றன? பிறகு, கற்றுத்தரப்படும் பாடங்களுக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது? தகுதியான ஆசிரியர்கள் இருக்கிறார்களா? பாட திட்டம் தரமாக இருக்கிறதா? போன்றவற்றைக் கவனிப்போம். ஒருவேளை, இவற்றில் ஏதேனும் குறைகள் இருந்தாலோ வேறு ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலோ அதைக் களைவதற்கு நிர்வாகத்தை அணுகுவோம். பிரச்னை எல்லைமீறிப் போனால் சட்ட நடவடிக்கை எடுப்போம். 

காரணம், நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகளும், நமது எதிர்பார்ப்புகளும் தேவைகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு அவற்றுக்கு தீர்வு கிடைக்கும் என்று நாம் நம்புகிறோம். நமது நம்பிக்கையைக் குலைக்கும் விதமாக, 'பணத்தை செலுத்திவிட்டு கல்வியை வாங்கிக்கொள். குறை நிறையெல்லாம் சொல்லக் கூடாது' என கல்லூரி நிர்வாகத்தில் சொல்லப்பட்டு, எவ்வித நடவடிக்கையும் எடுப்பதற்கு நமக்கு வாய்ப்பே கிடைக்காமல் போனால் எப்படி இருக்கும்! 

உண்மையிலேயே அப்படி ஒரு நிலைமை நம் நாட்டு மக்களுக்கு ஏற்படும் அபாயம் இருக்கிறது. இந்திய அரசு, உயர் கல்வியில் 'சந்தை வாய்ப்பு' வழங்குவதாக உலக வணிக மையத்துக்கு (WTO) வாக்களித்துள்ளது. கடந்த 2001 கத்தார் தலைநகர் தோஹாவில் இந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியது. 2005 ஆகஸ்டில் இதற்கான வாக்குறுதியைக் கொடுத்துவிட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின் இறுதிச் சுற்று எதிர்வரும் டிசம்பர் 15 முதல் 18 வரை கென்யாவின் தலைநகர் நைரோபியில் நடைபெறவுள்ளது. இதில் உலக வணிக மையத்தின் உறுப்பு நாடுகளின் வணிக அமைச்சர்கள் சந்தித்து, சேவைத் துறையில் வணிகம் பற்றிய பொது உடன்படிக்கையை (GATS) உறுதி செய்ய உள்ளனர். 
இந்திய அரசு வெளிப்படுத்தியுள்ள விருப்பங்கள் உறுதி செய்யப்பட்டால், இந்தியக் கல்வி அமைப்பே நிரந்தர சிக்கலில் மாட்டிக்கொள்ளும். இந்திய சட்டங்கள் அந்நிய பெருநிறுவனங்களின் நலன் காப்பதாக மாறும். அந்நிறுவனங்களை நம் நாட்டு சட்டம் கட்டுப்படுத்த முடியாது. அப்படியானால், அது எந்தளவு ஆபத்தானது! உயர் கல்வி மட்டுமல்லாமல் மருத்துவம், போக்குவரத்து, காப்பீடு, வங்கி உள்ளிட்ட வாழ்வாதார சேவைத் துறைகளிலும் சந்தை வாய்ப்பை அந்நிய பெருநிறுவனங்களுக்கு ஏற்படுத்தித் தருவதாக நம் நாடு வாக்களித்துள்ளது. உண்மையிலேயே இது தலைபோகும் காரியம்தான். 

GATS (General Agreement on Trade in Services) எப்படி உருவானது என்ற வரலாற்றுப் பின்னணியை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். 1945 வாக்கில் தொடங்கப்பட்ட உலக வங்கியும் சர்வதேச நிதி நிறுவனமும் (IMF)  இரண்டாம் உலகப் போரில் நலிவடைந்த நாடுகளின் பொருளாதாரத்தை மீட்பதற்காக தோற்றுவிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், அவை வளர்ந்த நாடுகளின் நலனிலும் அந்நிய பெருநிறுவனங்களின் நலனிலும் மட்டுமே கரிசனம் காட்டி வருகிறது. ஒப்பந்தங்களின் மூலமாக வளரும், ஏழை நாடுகளின் சந்தையைப் பன்னாட்டு பண முதலைகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் அமைப்பாகவே இவை செயல்படுகின்றன.  

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஃபிரான்ஸ், ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளின் GATT (General Agreement on Tariffs and Trade) எனும் ஒப்பந்தத்தின் ஊடாக தாம் உற்பத்தி செய்யும் பொருட்களைத் தங்குதடையின்றி பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தன. எளிய நாடுகளைச் சுரண்டவே இந்த ஒப்பந்தம் உதவியது. பண்டத்தை ஏற்றுமதி செய்து GATT ஒப்பந்தம் மூலமாக பல நாடுகளைச் சுரண்டியது போதாதென்று, நாட்டின் பொதுச் சேவைத் துறைகளையும், அறிவுசார் சொத்துகளையும் (intellectual property) தங்களின் கிடுக்குப்பிடிக்குள் கொண்டுவரவேண்டும் என வளர்ந்த நாடுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் நினைத்தன. இதன் விளைவாக, உலக வணிக மையம் நடத்திய உருகுவே  பேச்சுவார்த்தையில் GATS, TRIPS ஆகிய ஒப்பந்தங்கள் உருவாயின. 

1995ஆம் ஆண்டில்தான் GATT உலக வணிக மையமாக (WTO) மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த WTO உருவான பிறகு இந்தியா போன்ற வளரும், ஏழை நாடுகளை கொள்ளையடிப்பது வளர்ந்த நாடுகளுக்கும் பன்னாட்டு பெருங்குழுமங்களுக்கும் சுலபமானது. தற்போது, WTOவில் 161 உறுப்பு நாடுகள் இருக்கின்றன. IMF, உலக வங்கி ஆகியவற்றில் கடன் வாங்கிய நாடுகள் WTOவின் போருயில் அகப்படும். அதில் ஏற்படும் பெரிய சிக்கல் என்னவெனில், கடன் வாங்கிய காரணத்தால் WTO சொல்லும் பொருளாதாரக் கொள்கையையே அந்நாடுகள் பின்பற்ற வேண்டுமென மறைமுகமாக நிர்பந்திக்கிறது.  

1991இல் நரசிம்மராவ் இந்தியாவின் பிரதமராக இருந்தபோது, அதிக அந்நியக் கடன் உடைய மூன்றாம் நாடாக நம் இந்தியா இருந்தது. அப்போது மன்மோகன் சிங் நிதியமைச்சர். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திக்குமுக்காடிப் போனது இந்தியா. அடிப்படைத் தேவைகள் இறக்குமதி செய்யும் அளவுகூட நம்மிடம் நிதி (அந்நிய செலாவணி) இல்லை.  

இதுதான் சரியான சமயம் என்று இந்தியாவை வேட்டையாடுவதற்கு உலக நிதி நிறுவனம் (IMF) களம் இறங்கியது. கடன் கொடுப்பதற்கு முன்வந்தது. 'பன்னாட்டு நிறுவனங்களுக்கு சந்தையைத் திறந்துவிடவேண்டும்' என அது நிபந்தனை விதித்தது. அதை ஒப்புக்கொண்டு, IMF-யிடன் இருந்து இந்தியா  கடன் வாங்கியது. அதன்படி, நாட்டின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் செய்தது. அரசுகளின் வருவாயை அதிகரித்துவிட்டு செலவினங்களைக் குறைப்பது என்பதே IMF சொல்லும் அடிப்படைக் கொள்கை. தாராளமயமாதல், தனியார்மயமாதல், உலகமயமாதல் (LPG) என்பவை கடன் வாங்கியதால் விளைந்தவையே.  
இதன் விளைவாக உள்நாட்டு சிறு வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. நுகர்வு கலாச்சாரத்திற்கு மக்கள் அடிமைகளாயினர். வியாபாரிகள், தொழிலாளிகள், பொது மக்கள் என பலதரப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டனர். பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இன்னும் அதிகமானது. அதுமட்டுமல்லாமல், எல்லாத் துறைகளிலும் எண்ணிலடங்கா பிரச்னைகளை நமது நாடு சந்தித்து வருகிறது.
 1981-82இல் இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்தபோதே IMFல் கடன் வாங்கினார். அப்போதிருந்த கல்விக் கொள்கையில்கூட அது எதிரொலித்தது. அதிலிருந்து  நம் நாடு படிப்பினை பெற்றிருக்க வேண்டும். ஆனால்,  நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் இரண்டாவது முறையாக கடன் பெறப்பட்டது. 

வளரும் நாடுகள் கடன் சுமையில் இருக்கும்போது காப்பாற்றும் காவலனைப் போல் உள்ளே நுழைந்து, ஒப்பந்தங்கள் வாயிலாக அந்நாடுகளை மறைமுகமாக ஆட்சி செய்யும் வேலையைத்தான் IMF, உலக வங்கி ஆகியவை 1945இல் இருந்தே செய்துவருகின்றன.

இந்தப் பின்னணியில்தான் சேவைத் துறையில் வணிகம் பற்றிய பொது உடன்படிக்கையையும் (GATS) நாம் பார்க்கவேண்டும். 2005இல் GATS ஒப்பந்தத்தில் இந்திய அரசு வெளிப்படுத்தியுள்ள விருப்பங்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் நைரோபியில் உறுதி செய்யவிருக்கிறது. பொதுச் சேவைத் துறை பறிபோனால் அது தீய விளைவுகளை உண்டாக்கும். அதிலும் குறிப்பாக, கல்வித் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) அனுமதித்தால் அது நம் நாட்டையே சீரழித்துவிடும். 
உயர்கல்விக்கு அரசு பொறுப்பேற்காமல் இன்றைய நவீன தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி, கீழ்கண்ட வகைகளில் அதை நிறைவு செய்யலாம் என காட்ஸ் ஒப்பந்தம் பரிந்துரைக்கிறது.  

1. எல்லைத் தாண்டிய விநியோகம்:
சேவைக் கட்டணங்கள் செலுத்தி அயல்நாட்டு விநியோகிப்பவரிடம் இருந்து அஞ்சல்வழிக் கல்வி பெறுதல். அதாவது, இணையதளம் மூலமாக. 
2. வெளிநாட்டு நுகர்வு: வெளிநாட்டிற்கு நேரடியாக சென்று கட்டணங்கள் செலுத்தி கல்வி பெறுதல். 
3. வணிகத்திற்காக நேரடி வருகை: வெளிநாட்டி நிறுவனங்கள் இங்கு வந்து சேவைக் கட்டணம் வசூலித்து கல்வி வழங்குதல். 
4. தனியாள் நேர்வருகை: வெளிநாட்டு ஆசிரியர்கள் தனியாட்கள் என்ற முறையில், இந்தியாவுக்கு வந்து இங்குள்ள நிறுவனங்களில் சேவை வழங்கி கட்டணங்கள் வசூலித்தல்.

இந்த நான்கு வகைகளிலுமே இந்தியா தன் சந்தையைத் திறந்துவிட்டிருக்கிறது. கல்வி வணிகர்கள் நம் இந்தியாவில் களமிறங்கினால், நமது நாட்டு மாணவர்கள் கல்வியைக் கற்பவர்களாக இருக்க மாட்டார்கள். கல்வியை வாங்கும் நுகர்வாளராக இருப்பார்கள். வெளிநாட்டவர்களும், பன்னாட்டு நிறுவனங்களும் இலாபமீட்டும்.  

அப்படி செய்தால், கல்விக் கொள்கையே பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதமாக மாற்றப்படும். ஆய்வுகள்கூட பொது நலன் சார்ந்ததாய் இருக்காது. அவர்களது நலனையும் இலாபத்தையும் சார்ந்ததாகவே இருக்கும். 

இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். வெளிநாட்டுக் கல்வி வணிகர்கள் குறித்து 2000ஆம் ஆண்டு உலக வங்கியே ஓர் ஆய்வறிக்கை கொடுத்தது. அதில் 'வளர்ச்சி பெற்ற நாடுகளில் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்கள் பிற்பட்ட நாடுகளில் தரம்தாழ்ந்த கிளைகளை நிறுவின' என்று பதிவு செய்துள்ளது. ஆக, பத்து பைசாவுக்கும் புண்ணியமில்லாத கல்வியைக் கொண்டு நாம் என்ன செய்வது

ஆகவே, எப்படிப் பார்த்தாலும் கல்வியில் அந்நிய நேரடி முதலீடு செய்யப்படுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் உள்நாட்டு ஒழுங்குமுறையும் சீர்கெடும். சமூக ரீதியாக பாரதூரமான விளைவுகளை உண்டாக்கும். மேல்தட்டு மக்களுக்கே கல்வி என்ற நிலை ஏற்படும். எளிய மக்களுக்கு கல்வி எட்டாக்கணியாக மாறும். சமூக ஏற்றத்தாழ்வுகளை ஊதிப்பெருக்கும். 

மொத்த மக்கள் தொகையில் 8.15 சதவிகிதத்தினர் மட்டுமே பட்டதாரிகளாக உள்ளதாக 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சொல்கிறது. அப்படியென்றால், சமூக ஒடுக்குமுறையினால் தங்களது திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போன SC/ST, சிறுபான்மையினரின் நிலை என்னவாக இருக்கும்! இவர்களின் சமூக - பொருளாதார முன்னேற்றத்திற்கான கல்வி உதவித் தொகை, மானியம், இடைவிடாது போராடி பெற்ற இட ஒதுக்கீடு முதலியவை காணாமல் போகும். சட்டப் பாதுகாப்பிலிருந்து இவர்கள் முற்றிலுமாக விளக்கப்படுவார்கள். தகுதி, திறமை எனும் போலியான சொற்களுக்குப் பின்னால் இவர்களது உள்ளக்குமுறல் மறைக்கப்படும்.

காட்ஸ் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கினால் அது அரசுக் கல்லூரிகளை நலிவடையச் செய்யும். மேலும், நமது மொழிகள் அழியும். அறிவுசார் வளர்ச்சி முடங்கும். பொது மக்களுக்கு பொல்லாங்கு விளைவிக்கும்.

 பல்கலைக் கழக மானியக்குழு உள்ளிட்ட உயர்கல்வி கண்காணிப்புக் குழுக்கள் களைக்கப்படும். UGC, MCI, AICTE போன்றவற்றை களைத்துவிட்டு ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்படுமென பாஜக தனது 2014 தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளது. பா.ஜ.க அரசு வகுப்பறையில் வகுப்புவாதத்தை புகுத்தும் அதே சமயம் கல்வியில் தனியார்மயத்தையும் ஊக்குவிக்கிறது.

உதவியவை:
1.
உயர்கல்வி எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் - அ.மார்க்ஸ்.
2.
திரு. பிரின்ஸ் கஜேந்திர பாபுவின் உரைகளும் கட்டுரைகளும்.

Monday, August 24, 2015

உலகம் இருபது குடும்பத்துக்கு சொந்தம்

உலகம் இருபது குடும்பத்துக்கு சொந்தம்!

விமர்சனம் 1:

விகடன் பதிப்பகத்தில் இந்த மாதம் வெளிவந்திருக்கும் புத்தகம்!முதல் பதிப்பு! ஆசிரியர் திரு. வேங்கடம் அவர்கள்! விலை 105 ரூபாய்.

இந்த புத்தகம் பதிப்பித்து வெளி வந்த மறுகணமே, விரைவு தபாலில் அனுப்பி வைத்து,இதைப் படித்து பாருங்கள்,கட்டாயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று,நம்பிக்கையோடு அனுப்பி வைத்தார். அது மட்டுமல்லாது,செய்தி சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் என்னை நீங்கள் அலைபேசியில் அழையுங்கள் என்றுசொன்னதோடு,அவ்வாறு நான் அழைத்த போது, என்னுடைய பல கேள்விகளுக்கு மிக பொறுமையாக பதிலளித்த, அய்யா வீரராகவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

அவர் சொன்னபடியே,இந்த புத்தகம் எனக்கு பல நல்ல தகவல்களை தெரிந்து கொள்ள உதவி இருக்கிறது!அதைப் போலவே உங்களுக்கும் உதவும் என்பதில் சந்தேகம் இல்லை!

இந்த புத்தகம் குறித்து இரண்டு விதமான விமர்சனங்களை எழுத வேண்டும் என்று தோன்றுகிறது!

ஒன்று புத்தகம் குறித்த வெகு ஜன மக்களுக்கான விமர்சனம். அடுத்து இந்த புத்தகம் சொல்லும் விடயங்களுக்கும்,கிறித்துவத்துக்கும் அதாவது பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்ட விடயங்களுக்குமான தொடர்பை,இரண்டாவது விமர்சனமாக எழுதலாம் என்றும் தோன்றுகிறது!இரண்டாவது விமர்சனம் கிறித்துவத்தை நம்பும் நண்பர்களுக்கானதாக இருக்கும்!

உலகம் இருபது குடும்பத்துக்கு சொந்தம்என்ற தலைப்பே கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது! புத்தகத்தை மேலோட்டமாக வாசித்த போது, எதோ உலக பணக்காரர்கள் பற்றிய புத்தகம் போல என்று எண்ணினேன்.மொத்தம் இருபது அத்தியாயங்கள்,இருநூற்று முப்பது பக்கங்கள்.முதல் இரண்டு மூன்று அத்தியாயங்கள் வாசிக்கும் போது,வாசிக்கவே கொஞ்சம் சிரமமாக தான் இருந்தது.காரணம் சொல்லப்பட்ட விடயங்கள் ரொம்ப சுவராஸ்யம் இல்லாத விடயங்கள் போலவே தோன்றியது.ஆகவே முதல் மூன்று அத்தியாயங்களை படிக்க இரண்டு நாட்கள் ஆனது. ஆனால் அடுத்த பதினெட்டு அத்தியாயங்களையும்,ஒரே இரவில் படித்து முடிக்கும் அளவுக்கு சுவராஸ்யம் மிகுந்ததாகி போனது என்றால் மிகையாகாது!

அப்படி என்ன சுவராஸ்யம்? 

அதாவது ஒட்டு மொத்த உலகமும்,இருபது பணக்கார குடும்பங்களாலும்,நூற்றுக் கணக்கான ரகசிய குழுக்களாலும் தான் ஆளப் படுகிறது!இந்த குடும்பங்களை சேர்ந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை வெறும் ஆறாயிரம் பேருக்கு மிகாது என்று சொல்கிறது புத்தகம்.மட்டுமல்லாது அதை நிரூபிக்கும் வகையில்,பல்வேறு சம்பவங்களை தொடர்பு படுத்துகிறார் எழுத்தாளர்.

ஒவ்வொரு நாட்டின் அரசியல், பொருளாதாரம் மற்றும் அனைத்து விடயங்களும் இவர்களின் விருப்பப்படி தான் நடக்கிறது அல்லது அரங்கேற்றப் படுகிறது! இந்த குடும்பங்கள் தயாரிக்கும் பொருட்கள்,இந்த குடும்பங்களுக்கு சொந்தமான தனியார் வங்கிகள்,இவர்களுக்கு சொந்தமான பல உலக தொலைக்காட்சி சானல்கள் மற்றும் இவர்கள் உருவாக்கும் செய்திகள்,இவர்கள் தயாரிக்கும் கேளிக்கை மற்றும் தொலைக்காட்சி நிகழ்வுகளைத் தான் ஒட்டுமொத்த உலகமும் பார்க்கிறது! ஆக நாம் என்ன சிந்திக்க வேண்டும், என்ன பேச வேண்டும்,என்ன சாப்பிட வேண்டும் என்று தீர்மானிப்பவர்கள் இவர்கள் தான் என்று சொல்கிறது புத்தகம். 

*
உலக நாடுகளின் அரசியல் தலைவர்களை தீர்மானிப்பது யார்? 
*
நாடுகளுக்கிடையே சண்டையா,அதை தீர்மானிப்பது யார்? 
*
நாடுகளுக்கிடையேயான சண்டைகளை சமாதனம் செய்கிறேன் என்ற பெயரில்,மற்ற நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது யார்?
*
போர் செலவுக்கு தேவையான பணத்தை/கடனை நாடுகளுக்கு வழங்குவது யார்?
*
உலக நாடுகள் பலவற்றில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு, அரசாங்கங்கள் தவிக்கும் போது, நாடுகளுக்கே கடன் கொடுக்கும் தனி நபர்கள் யார்?
*
உலக நாடுகளின் பொருளாதார மந்த நிலையா,பண வீக்கமா,டாலர் விலை ஏற்றமா இறக்கமா அதை தீர்மானிப்பது யார்?
*
உலகின் ஒட்டுமொத்த பங்குச்சந்தை குறியீடுகளை தீர்மானிப்பது யார்?
*
அமெரிக்க டாலரை,பிரிட்டிஷ் புவுண்டை அச்சிடுவது யார்?
*
ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையை தீர்மானிப்பது யார்?
*
உலகின் அத்தனை வங்கிகளையும் நிர்வகிப்பது யார்?
*
ஒட்டு மொத்த உலகத்தையும்,நவீன விஞ்ஞான வளர்ச்சி மற்றும் தொழில் நுட்பங்கள் மூலம் கண்காணிப்பது யார்?

இப்படியான பல்வேறு கேள்விகளும் அதற்கான விடைகளும்,நம்மை மேலும் மேலும் ஆச்சர்யத்தில் மூழ்க வைத்தது! சார் இந்த செய்தி எல்லாம் உண்மை தானா என்று நண்பரை தொடர்பு கொண்டு கேட்டேன்.செய்திகள் அனைத்துக்கும் ஆதாரம் இருக்கிறது என்று நண்பர் சொன்னார். 

இந்த இருபது குடும்பங்களில் முக்கியமான சில குடும்பங்களாக பிரித்தானிய ராணியின் குடும்பம்,ரோத் சைல்டு குடும்பம், ராக்பெல்லர் குடும்பம், லீகா சிங்க் குடும்பம்(ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனர்),காலின்ஸ் குடும்பம்,வால்ட் டிஸ்னி குடும்பம்,பண்டி குடும்பம், அரிஸ்டாட்டில் ஒனாசிஸ் குடும்பம் போன்றவை மிக முக்கியமான குடும்பங்களாக இருக்கின்றன.

இன்று வரைக்கும் காமன்வெல்த் நாடுகளில் அங்கம் வகிக்கும் ஐம்பத்து மூன்று நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார முடிவில்,பிரித்தானிய ராணியின் குடும்பத்துக்கு பெரும் பங்கு இருப்பதாக சொல்லப் படுகிறது. இந்த ஐம்பத்து மூன்று நாடுகளுக்கு என்ன ஒரு முடிவென்றாலும், நாடுகளுக்கு இடையே ஒரு போர் சூழல் உருவானால் கூட, அதில் முடிவெடுப்பது ராணியின் குடும்பம் தான் என்று சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு அதிகாரங்கள் இன்னும் அவர்களுக்கு இருக்கிறதாம். 

நாம் காலையில் பயன்படுத்தும், பற்பசை முதல், இரவு போர்த்தும் கம்பளி வரை நாம் பயன்படுத்தும் அத்தனை பொருட்களுக்கும்,இந்த உலக பணக்காரர்களுக்கு எதோ ஒரு வகையில் சம்மந்தம் இருக்கிறதாம். 

தொலைக்காட்சியில் என்ன செய்தியை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதாகட்டும்(உண்மை செய்தியாய் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை),உலக சினிமாவாக இருக்கட்டும், குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன் படங்களாகட்டும்,அதை தயாரிக்கும் வால்ட் டிஸ்னி போன்ற பெரும் முதலாளிகள் தீர்மானிப்பதை தான்,நாம் பார்த்துக் கொண்டு இருப்பதாக சொல்கிறார்கள். 

நம் குழந்தைகளின் சிந்தனைகளை வடிவமைப்பதில் அல்லது கட்டுப் படுத்துவதில், இந்த கார்ட்டூன் நிகழ்வுகளுக்கு பெரும் பங்கு இருக்கிறது. குழந்தைகளின் குண நலன்களை தீர்மானிக்கும் வகையில், அல்லது கார்ட்டூன் நிகழ்வுகளுக்கு அடிமையாக கிடக்கும் அளவுக்கு நம் குழந்தைகள் மாற்றப்படுகிறார்கள். ஆக நம் குழந்தைகளின் சிந்தனை வரை,இந்த பெரும் முதலாளிகள் தான் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதாய் சொல்கிறார் ஆசிரியர். இதை நாம் அறியாமலேயே, நமக்கு மேலே யாரோ தீர்மானிக்கிறார்கள் என்று சொல்ல வருகிறார்.

அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து, அனைத்தும் வெளிநாடுகளின் தயாரிப்பு. உலக மயமாக்கல் மூலமாய் நாம் மீண்டும் அடிமை வாழ்வுக்கு தள்ளப்பட்டு விட்டோம் என்கிறது புத்தகம்! சுருங்க சொல்லப் போனால், உலகமயமாக்கலுக்கு அடிமையாகி விட்ட நாம் இன்னும் சுதந்திரம் பெறவே இல்லை என்பது தான் நிதர்சனம். 

வங்கி எப்படி செயல்படுகிறது, கடன் வழங்குவதும், கடனட்டை வழங்குவதும், வட்டியை தீர்மானிப்பதும், வங்கி காசோலை விடயங்கள், நகை பாதுகாப்பு பெட்டகங்கள் அதற்கான கட்டணங்கள் இவை எல்லாம் எப்படி தீர்மானிக்கப் படுகிறது, இதை யார் முதன் முதலில் வடிவமைத்தது போன்ற பல சுவராஸ்யமான தகவல்கள் இருக்கின்றன.

தனியார் வங்கிகள் எப்படி ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கிறது, அல்லது ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தில் அவற்றின் பங்கு என்ன போன்ற பல விடயங்கள் மிக எளிதாக விளக்கப் பட்டுள்ளது. 

அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனை, இந்த பெரும் பணக்காரர்கள் குடும்பம் எப்படி எல்லாம் மிரட்டியது, இறுதியில் அவர் ஏன் கொல்லப்பட்டார்,எப்படி கொல்லப்பட்டார் போன்ற செய்திகள் ஆச்சர்யமாக இருக்கிறது! கற்பனைக்கு எட்டாத அளவில் பல்வேறு உலக சம்பவங்கள் விளக்கப்பட்டுள்ளது. கென்னடி ஏன் சுட்டுக் கொல்லப்பட்டார்,அதற்கான காரணங்கள் என்ன போன்ற தகவல்கள் தலை சுற்ற வைக்கின்றன. லெனின் கூட இந்த உலக பணக்காரர்களால் புலம்பியதாக சொல்லப் படுகிறது.

உலகத்தை கண்காணிக்கும் மிகப்பெரும் உளவு நிறுவனம் தான் பென்டகன் என்று கூறுகிறது புத்தகம்.உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் கண்காணிக்கப்பட்டு கொண்டே இருக்கிறோம். எப்படியெனில் அது நமது வங்கி கணக்காக இருக்கலாம். நம் அலைபேசியாக இருக்கலாம், நம் கணினி மற்றும் இணையம் மூலமாக இருக்கலாம்,ஆதார் அட்டை மூலமாக, அமெரிக்காவை பொறுத்த வரையில் சோசியல் செக்யூரிட்டி நம்பர், கிரெடிட் கார்ட், கூகிள் எஞ்சினில் மக்கள் அதிகம் தேடும் விடயங்கள் என்ன, மக்கள் எதைக் குறித்து விவாதிக்கிறார்கள், என்ன சினிமாவை விரும்பி பார்க்கிறார்கள், சமூக வலையத் தளங்களில் என்னென்னே விடயங்கள் அதிகம் விவாதிக்கப் படுகிறது, மக்கள் எதை விரும்புகிறார்கள் என்று அனைத்து விடயங்களும் எதோ ஒரு வகையில் கண்காணிக்கப் பட்டு கொண்டே இருக்கிறது. 

சமீபத்தில் உலக நாட்டு தலைவர்களின் தொலை பேசிகள் அனைத்தும் அமேரிக்காவால் ஒட்டுக் கேட்கப்படுவதாக சொன்னார் ஸ்னோடென். அந்த அளவுக்கு கடுமையாக உலக மக்களை கண்காணிக்கிறார்கள். இந்தியாவில் எங்கு குண்டு வெடிக்கும் என்பதை அமெரிக்க உளவு நிறுவனம் சொல்லித் தான் இந்தியாவுக்கே தெரிய வேண்டிய சூழல்.இங்கே இதை எல்லாம் அமேரிக்கா தானே செய்கிறது என்று எளிதாக சொல்லி விடலாம். ஆனால் அந்த அமெரிக்காவையும்,ஐ.நாவையும் கூட இந்த உலக பணக்காரர்கள் தான் நிர்வகிக்கிறார்கள் என்கிறது புத்தகம். ஏன் இந்த குடும்பங்கள் அப்படி கண்காணிப்பு செய்ய வேண்டும், அதற்கான தேவைகள் என்ன என்பதை எல்லாம் மிக விளக்கமாக சொல்கிறது புத்தகம். 

ஐரோப்பியன் யூனியன் ஏன் உருவானது, என்ன காரணம், அதைப் போலவே அடுத்து வட அமேரிக்கா மற்றும் தென் அமெரிக்காவும் இணையும் காலமும் வரும், மட்டுமல்லாது ஆசிய நாடுகள் எல்லாம் ஒரு கூட்டாக சேரும், இறுதியாக உலகம் முழுவதும் ஒரு குடையின் கீழான ஆட்சிக்குள் கட்டாயம் வரும் என்றும், அதற்கான வேலைகள் மெதுவாக நடந்து கொண்டே இருக்கின்றன என்றும் பல தகவல்களை சொல்கிறது புத்தகம்!

இறுதியில் புத்தகத்தின் ஒரு பகுதியில் ஆசிரியர் இப்படியாக சொல்கிறார், இந்த மாதிரியான பல்வேறு விடயங்களை எல்லாம் அறிந்த பிறகு, அவற்றை உண்மை என்று உணர்ந்த பிறகு, என் பார்வை விரிவு பட்ட பிறகு, இந்திய/உலக தொலைக்காட்சிகளில் மக்கள் பிரச்சினை, தேசங்களின் எல்லை பிரச்சினை, பொருளாதார ஏற்ற இறக்கம், பண வீக்கம் போன்றவை குறித்து தொண்டை தண்ணி கிழிய கத்தி விவாதம் செய்பவர்களை பார்த்தால்,அல்லது அதற்கான காரணங்களாய் அவர்கள் சொல்லும் விடயங்களைப் பார்த்தால் எனக்கு கேலியாகவும்,அவர்கள் எல்லாம் எனக்கு கோமாளிகளாகவும் தெரிகிறார்கள் என்கிறார்.காரணம் பிரச்சினையின் சூத்திரதாரி யாரென்றே தெரியாமல், அல்லது தீர்வு எங்கிருந்து வர வேண்டும் என்பதே தெரியாமல் இவர்கள், இவர்களுக்கும் எதெதையோ பேசுவதும், சண்டையிடுவதும் மிகப்பெரிய காமெடி என்பதாய் எழுதுகிறார். 

பல பிரச்சினைகளுக்கு தீர்வு எங்கோ இருக்க, நாம் வெறும் அம்புகளை நொந்து கொண்டு இருக்கிறோமோ என்று கூட தோன்றுகிறது!

எது எப்படியாயினும் கட்டாயம் இந்த புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். உங்களுக்குள் பல்வேறு கேள்விகள் வரும்! அதற்கான தேடல்களும் தொடங்கும்.புத்தகம் சொல்லும் செய்திகளை நம்பும் சூழல் உருவாகும்.உங்கள் பார்வை விசாலம் அடையும் என்பதற்கு நான் உத்தரவாதம்!கட்டாயம் இது ஒரு விழிப்புணர்வு புத்தகமாய் இருக்கும்!

நன்றி! :ஆன்டனி வளன்

Monday, August 10, 2015

களவு போகும் கல்வி துறை - தொடர் 1 - மு. நியாஸ் அகமது

களவு போகும் கல்வி துறை

 | தொடர் | 1
இனி உங்கள் குழந்தைகள் கிராக்கி என்று அழைக்கப்படுவார்கள்
- மு. நியாஸ் அகமது | nomadniya@gmail.com
உங்கள் குழந்தைகளை யாராவது கிராக்கி என்றழைத்தால் நீங்கள் மகிழ்வீர்களா... அது அப்படி ஒன்றும் கெட்ட வார்த்தை அல்ல. நல்ல உருது சொல் தான் - பொதுவாக ‘தேவை’யை குறிக்க இச்சொல் தமிழகத்தில் பயன்பட்டாலும், எங்கள் பகுதியில் வாடிக்கையாளர்களை குறிக்கவே அதிகம் இச்சொல் பயன்படுகிறது. இந்த சொல் உங்கள் செவிகளையும் கடந்து சென்றிருக்கும். சென்னைவாசியாக நீங்கள் இருந்தால் சாவு கிராக்கி என்ற சொல்லைக் கடக்காமல் வந்திருக்க மாட்டீர்கள். ஆனால் யாரும் தங்கள் குழந்தைகளை கிராக்கி என்றழைப்பதை விரும்பமாட்டார்கள். குழந்தைகளை உண்மையாக நேசிக்கும் பலர் அப்படி யாரேனும் அழைத்தால் நிச்சயம் அடிக்கக்கூட செல்வார்கள். ஆனால், உலக வர்த்தக அமைப்பு இனி உங்கள் குழந்தைகளை கிராக்கி என்று அழைக்க வேண்டும் என்கிறது. சரி, இனி எம் நாட்டில் குழந்தைகளை அப்படியே அழைக்கிறோம் எசமானே... என உறுதி அளித்து அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மேன்மை பொருந்திய இந்திய அரசும் உறுதி அளித்துள்ளது.
என்ன பிதற்றுகிறாய் என்கிறீர்களா...! இல்லை. இது வெற்று பிதற்றல் அல்ல, வார்த்தை அலங்காரத்துக்காகவோ, இல்லை கட்டுரையின் சுவாரஸ்யத்தை கூட்ட வேண்டும் என்பதற்காகவோ, நான் இதை சொல்லவில்லை. நூறு சதவீதம் உண்மை.
வர இருக்கும் பேராபத்தை புரிந்துக் கொள்ள, எனக்கும் கல்வியலாளர் மீனாட்சி உமேஷுக்கும் நடந்த உரையாடல் உங்களுக்கு உதவும் என நம்புகிறேன்.
கல்வியலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொது செயலாளராக இருக்கும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பிடமிருந்து எனக்கு இந்திய கல்வித் துறை சந்திக்கும் பிரச்சனைகள், அவர்கள் நடத்தும் கூட்டங்கள் குறித்து மின்னஞ்சல் வருவது வழக்கம். சேவை துறையில் வர்த்தகம் குறித்த ஒரு செய்தி அறிக்கையும் அப்படி தான் வந்தது. அந்த அறிக்கை முக்கியம் எனப் பட்டதால் அதனை மீனாட்சி உமேஷூக்கு அனுப்பினேன்.
மின்னஞ்சல் அனுப்பிய சில மணி நேரங்களில் அவரிடம் இருந்து அழைப்பு வந்தது.
“நியாஸ்... அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் மட்டும் நடைமுறைக்கு வந்தால், நிச்சயம்... நானும் மரணித்து எம் குழந்தைகளையும் கொன்று விடுவேன்” என்றார்.
எனக்கு தூக்கி வாரிப் போட்டது. நிச்சயம் இப்படி ஒரு எதிர்வினையை நான் எதிர்பார்க்கவில்லை. சிந்தித்து பார்த்தால் அவர்கள் சொன்னது சரித்தான் எனப்பட்டது. குழந்தைகளை உண்மையாக நேசிக்கும் அனைவரும் அப்படியொரு முடிவைத் தான் எடுப்பார்கள்.
அவ்வளவு ஆபத்துகள் கொண்டது அந்த ஒப்பந்தம்.
WTO - GATS ஒப்பந்தம்:
என்ன மிரட்டுகிறாய்....? பீடிகை போதும்... தெளிவாக கூறு என்று நீஙகள் சொல்வது கேட்கிறது.
இந்திய அரசு, உலக வர்த்தக அமைப்பின் (WTO) 160 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த கல்வி வணிகர்கள் இந்தியாவில் கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் பிறவகைத் தொழில் நுட்ப அல்லது தொழில் முறைக் கல்வி கழகங்களும் வணிக நிறுவனங்களாக அமைத்துக் கொள்வதற்கு இடமளிக்க முன் வந்துள்ளது. அதாவது சேவை துறையில் வர்த்தக உடன்படிக்கையில் (GATS) வரும் டிசம்பர் மாதம் கென்யா - நைரோபியில் நடைப்பெற இருக்கிற ‘அமைச்சர் நிலை சந்திப்பு’ கூட்டத்தில் இந்தியா கையெழுத்திட போகிறது. அப்படி கையெழுத்திடும் பட்சத்தில் இந்திய உயர் கல்வி துறை பெரும் சந்தையாக மாறி, உலக பெரும் முதலாளிகளின் வேட்டைக்காடாக மாறும். கட்டற்ற அந்நிய முதலீடு உள்ளே வரும். உயர் கல்வி துறை சேவை என்பதிலிருந்து மாறி முழு வணிகமாக மாற இது வழிவகுக்கும். உயர் கல்வி என்பது பண்டமாக மாறும் மாணவர்கள் நுகர்வோர் (கிராக்கி)களாக மாறுவார்கள்.
ஹோ... இவ்வளவு தானா... இதற்காக தான் இந்த பீடிகையா... இப்போது மட்டும் என்ன வாழ்கிறது இங்கே... உள்ளூர் கல்வி தந்தைகள் என்ன அறத்துடனா கல்வி நிலையங்களை நடத்துகிறார்கள்...? ஏற்கெனவே அது வியாபாரமாக மாறிவிட்டது...? உலக முதலாளிகள் வந்தால் என்ன... ? என்று அலுத்துக் கொள்ளும் நடுத்தர வர்க்கமா நீங்கள். இல்லை... நீ என்ன இடதுசாரியா...? உங்களுக்கு நாட்டின் வளர்ச்சியில் கொஞ்சம் கூட அக்கறை இல்லையா...? என்று அலுத்துக் கொள்ளும் உயர்த்தர வர்க்கமா நீங்கள்...?
பாராபட்சம் இல்லாமல் அனைவரும் இந்த ஒப்பந்தத்தால் பாதிப்படைய போகிறோம்.
அரசு கல்லூரிகள் இல்லாமல் போகும்:
முதலில் நடுத்தர வர்க்கத்தினரின் கேள்விக்கு வருகிறேன். நானும் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவன் தான். தனியார் கல்லூரியில் உதவி தொகையினால் படித்தவன். உங்கள் கோபம் நியாயமானது. இங்கு உயர் கல்வி முழு வியாபாரமாகி ஒரு தசாப்தத்திற்கு மேல் ஆகிறது. லட்சங்கள், கோடிகள் என எந்த வெட்கமும் இல்லாமல் கல்வி வியாபரம் கன ஜோராக நடக்கிறது. இது எதுவும் மறுப்பதற்கில்லை. ஆனால், இப்போதும் நமக்கு நம்பிக்கை அளிப்பதாக அரசு கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் மட்டுமே உள்ளன. அதன் உட்கட்டமைப்பு வசதி தரமற்றதாக, பாடத் திட்டங்கள் மேம்படுத்த வேண்டியதாக பேராசிரியர்கள் பற்றாகுறையாக இருக்கலாம். ஆயிரம் குற்றச் சாட்டுகள் இருந்தாலும் ஏழை, எளிய மக்கள் கல்வி பெறும் வாய்ப்பை அரசு கல்வி நிறுவனங்களே வழங்குகின்றன. அரசை தொடர்ந்து நிர்பந்திப்பதன் மூலம் அரசு கல்வி நிறுவனங்களை மேம்படுத்த முடியும்.
ஆனால் இந்த (WTO-GATS) ஒப்பந்தம் நிறைவேறும் பட்சத்தில், அரசு கல்லூரிகளுக்கான மானியம் வெட்டப்படும். அதன் தரம் மேலும் குறையும், கல்வி கட்டணம் எளியவர்கள் செலுத்த முடியாத அளவிற்கு அதிகரிக்கும். மெல்ல காலப்போக்கில், அரசு கல்லூரிகள் என்பதே இல்லாமற் போகும். நேரடியாக சொல்ல வேண்டுமானால், ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி மறைமுகமாக மறுக்கப்படும்.
ஏற்கெனவே, நம் நாட்டில் உயர் கல்வி துறையில் சமத்துவமின்மை நிகழ்கிறது. குறிப்பாக இந்தியாவில் 12 சதவீதத்திற்கு மட்டுமே ஏற்ற வயதில் உயர் கல்வி கிடைக்கிறது (தகவல் - Neo - Liberal assault on higher education). மேலும் இந்தியாவில் 8.15% மக்கள் மட்டுமே பட்டாதாரிகள். (தகவல்: http://www.thehindu.com/…/only-815-of-in…/article7496655.ece) இத்தகைய சூழலில் உயர் கல்வி துறையில் அந்நிய முதலீடு குவியும் பட்சத்தில், உயர் கல்வி என்பது ஏழைகளுக்கு எட்டா கனியாக மாறும்.
வளர்ச்சியை எதிர்க்கிறோமா...?
பணம் இருந்தால் கல்லூரிக்கே செல்லாமல் நம் நாட்டில் பட்டம் பெற முடியும் என்ற நிலைத்தான் இப்போது உள்ளது. இத்தகைய சூழலில் அந்நிய கல்வி நிறுவனங்கள் வந்தால் கல்வியின் தரம் நிச்சயம் உயரும் தானே... நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள்...? சரி... நீங்கள் எக்கேடாவது கெட்டுப் போங்கள் எங்களிடம் பணம் இருக்கிறது நாங்கள் படித்துக் கொள்கிறோம் என்று உயர் வகுப்பில் இருக்கும் நீங்கள் நினைத்தால் உங்களைவிட முட்டாள் யாரும் இல்லை.
கோபம் கொள்ளாதீர்கள். நீங்கள் நம்பும், போற்றும் உலக வங்கி 2000 ஆம் ஆண்டு ஓர் ஆய்வை செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன் சாரம், “A report of a survey by world bank in 2000 on foreign educational providers is on record stating that well - known universities of developed countries established low standard branches in backward countries"(தகவல் - All India Forum For RIght To Education Report). இதன் அர்த்தம் புரிகிறது அல்லவா... நன்கு அறியப்பட்ட வெளிநாட்டு பல்கலைகழகங்கள், பின் தங்கிய நாடுகளில் தரமற்ற கிளைகளையே நிறுவி உள்ளது.
இது தான் முதலாளித்துவத்தின் உண்மை முகம். அனைவரும் தரமான கல்விப் பெற வேண்டும் என்பது அவர்களின் நோக்கம் அல்ல, லாபம்... லாபம்... மேலும் லாபம் என்பது மட்டுமே அவர்களின் நோக்கம்
அந்நிய பல்கலைக் கழகங்கள் நம் நாட்டிற்கு வருவதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அறிவு பரிமாற்றத்திற்கு வருகிறதென்றால். அது நிச்சயம் வரவேற்க வேண்டிய ஒன்று. ஆனால், இந்த ஒப்பந்தம் இந்திய சந்தையை குறி வைத்து லாபநோக்கத்துடன் வருகிறது. அதாவது யார் வேண்டுமானாலும் கடை விரிக்கலாம், அது தரமானதா இல்லை தரமற்றதா என்ற எந்த நிபந்தனையும் இல்லை.
சந்தையின் அடிமைகள்:
என் பள்ளி கல்லூரி பருவத்து ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பெயர் அனைத்தும் எனக்கு இன்றும் நினைவில் உள்ளது. எனக்கு பள்ளி பாடம் எடுத்த லதா, ராதா, பீட்டர், சத்தியமூர்த்தி, சங்கர் போன்ற ஆசிரியர்கள் பாட திட்டத்தை தாண்டி பரந்துபட்டு யோசிக்கும் வெளியை திறந்துவிட்டார்கள். ஆசிரியர் - மாணவன் என்பதை தாண்டிய உணர்வு பூர்வமான பிணைப்பு இருந்தது.
ஆனால், இந்த ஒப்பந்தம் நிறைவேறுமானால் இந்த உறவு பிணைப்பு அறுப்படும். சந்தைக்கு தேவையான கல்வியை மட்டுமே போதிக்கும் ஆசிரியர்களிடமிருந்து எந்த பிணைப்பையும் எதிர்பார்க்க முடியாது. அதாவது நம் கல்வி துறை பெருங்குழும நிறுவனங்களுக்கு தேவையான அடிமைகளை உற்பத்தி செய்யும் கூடாரமாக மட்டுமே இருக்கும்.
எளிய உதாரணம், மான்சாண்டோ நிதி உதவியில் நம் பல்கலைகழகங்களில் செய்யப்படும் ஆராய்ச்சிகள் எதுவும் மக்களுக்கு பயன்படுவதாக இல்லாமல் பெருநிறுவனங்களை போஷாக்கு ஆக்குவதாகவே உள்ளது. மக்களுக்கு பயன் அளிக்காவிட்டாலும் பரவாயில்லை மக்களை அழிப்பதாகவே உள்ளது.
மான்சாண்டோ நிதி உதவி அளிக்கும் பல்கலைக்கழகங்களே இவ்வளவு அழிவை உண்டாக்கும் பட்சத்தில் மான்சாண்டோவே கல்வி நிறுவனம் தொடங்கினால்....?
நிச்சயம். இங்கு வரும் பல்கலைக் கழகங்கள் நம் சுய சிந்தனையை, தற்சார்ப்பை அழிக்கும்.
அதிகாரத்தை பரவலாக்கலை (decentralisation) பற்றி அனைவரும் பேசி வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் கல்வியை மையப்படுத்தவே உதவும். மைப்படுத்துதல் என்றால் ஒற்றை முதலாளிக்கு இயைவாக சிந்திக்க வைத்தல்.
ஏற்கெனவே நாம் என்ன உண்ண வேண்டும், எப்படி பல் துலக்க வேண்டும் என பெருநிறுவனங்களே முடிவு செய்கின்றன.இந்த ஒப்பந்தமும் நிறைவேறுமானால், நாம் என்ன சிந்திக்க வேண்டும் என்பதையும் நிறுவனங்களே முடிவு செய்யும். சுதந்திர சிந்தனை தடைப்படுவதை விட கேவலம் வேறு என்ன இருக்க முடியும்...?. நவீன அடிமைகளாகத்தான் இருக்க போகிறோமா...?
ஜனநாயகத்தின் மீதும், நாட்டின் எதிர் காலத்தின் மீதும் விருப்பம் கொண்டோர் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாமல் தடுக்க அழுத்தம் தர வேண்டும்.
அதற்கெல்லாம் மேலாக நம் குழந்தைகள் கிராக்கிகளாக்கிவிட கூடாது.

நன்றி :  மு. நியாஸ் அகமது