Monday, October 26, 2015

சினிமாவை வெறும் சினிமாவாக பாருங்க

அவர்கள் மொன்னைகளல்ல...

சினிமாவை வெறும் சினிமாவாக மட்டுமே பார்த்துட்டு போங்க…அதுக்குமேல் அதுல எதையும் தேடாதீங்க… என்கிற போதனைகளில் எனக்கு உடன்பாடுமில்லை… நம்பிக்கையுமில்லை. 

சினிமாவை ஒரு பண்பாட்டுச் சாதனமாகவே நான் பார்க்கிறேன்.

குடும்பம்,கல்வி, மதங்கள்,சாதி போன்றவை எப்படி நமது பண்பாட்டை வடிவமைக்கின்றனவோ, அதுபோலவே சினிமாவும் நமது பண்பாட்டை வடிவமைக்கிறது என்பதை நான் மெய்யாகவே உணர்கிறேன்.

அந்தப்புரிதலிலிருந்தே சினிமாவை நான் துய்க்கிறேன். 
சினிமா அறிமுகமாவதற்கு முன் கலைஇலக்கியவடிவங்கள் அந்த வேலையை செய்தன… இப்போதும் செய்கின்றன. ஆனாலும் வலிமைமிக்க ஊடகமான சினிமா அந்த பண்பாட்டுப்பணியை இன்னும் திருத்தமாகவும் அழுத்தமாகவும் நமக்குள் செயல்படுத்துகிறது. காலத்திற்கேற்ப மக்களின் மனங்களை அவை தகவமைக்கின்றன.. நல்ல விதமாகவோ..மோசமாகவோ. முற்றிலும் வணிகமயமான சினிமா, அதன் வணிக நோக்கத்திற்காகவே இந்த தகவமைப்பில் ஈடுபடுகின்றன. அந்த வணிக நோக்கம் அப்பட்டமாக பல்லிளித்துவிடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது கொஞ்சம் அருள் பார்வையையும் பார்வையாளன்மீது திருப்புகின்றன.

நிற்க. கத்திக்கு வருவோம். கார்ப்பரேட்டுகளின் தண்ணீர் கொள்ளையை பற்றி பேசுகிறது இந்தப்படம். படத்தில் நடித்தவர் கார்ப்பரேட்டுகளின் குளிர்பான விளம்பரத்தில் நடித்து கோக் குடிக்க பரிந்துரைத்தவர். படத்தை தயாரித்தது ஒரு கார்ப்பரேட் நிறுவனம்.அதை இயக்கியவர் கார்ப்பரேட் நிறுவனத்தின் உதவியுடன் படங்கள் தயாரிப்பவர் இந்திய கார்ப்பரேட்டுகளின் ஆசைக்காக ”ஏழாம் அறிவை”க்கூட பயன்படுத்துபவர். இவர்களெல்லாம் சேர்ந்துதான் கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக படம் எடுத்திருக்கிறார்கள். ஆடு நனையுதேன்னு ஓநாய்கள் அழுத கதைதான் போங்கள்.இருக்கட்டும்.
கதை என்ன சொல்கிறது. கம்யூனிசத்திற்கு நள்ளிரவிலும்கூட விளக்கம் அளிக்கும் அளவுக்கு அறிவு கொண்டவர், பூமிக்கடியில் இருக்கும் தண்ணீரை கண்டுபிடிக்கும் அளவுக்கு விஞ்ஞானம் படித்தவர், ஊர் மக்களின் துயரம் கண்டு சகித்துக் கொள்ளமுடியாதவர், விளைநிலங்கள் வீணாய் போவதைக்கண்டு பொங்கி எழும் ஒரு இளைஞர் நேர்வழியில் செய்யமுடியாததை… 18 முறை சிறையிலிருந்து தப்பித்த ஒரு குற்றவாளி செய்துமுடிப்பார் என்பதுதான் கதை.
கம்யூனிசமெல்லாம் பேசத்தான் நல்லாயிருக்கும்.வேலைக்கு ஆகாது..கத்திகபடா எடுப்பதுதான் சரிப்பட்டுவரும் என சொல்றாங்களோ. அந்த பலே ஆள் என்ன வேண்டுமானாலும் செய்வார். 50 பேரை அரையிருட்டிலேயே அடித்து காலி செய்வார். ஆள் மாறாட்டம் செய்வார். நீதிபதியின் தோளில் கைபோட்டு தனக்கு சாதகமாக தீர்ப்பளிக்கச்சொல்லி மிரட்டுவார்.அதெல்லாம் கண்டுக்கக்கூடாது. அதையே வில்லன் செய்தால் தப்பு. கதாநாயகன் செய்தால் ரைட்டோ.. கட்டக்கடைசியில் பத்து நிமிடம் வீரமாக பேசுவார். அப்போதும்கூட கோககோலா என முழுசாக சொல்லமாட்டார். கோலா என சொன்னால் நாம் புரிந்து கொள்ளவேண்டும். அலைக்கற்றையை பேசுவார்..சொத்துகுவிப்பை மறந்துவிடுவார். நாம்.. அட போங்கப்பா.. இதுவாச்சும் பேசினாரேன்னு பொங்கி எழுந்து கொண்டாடிக் கொள்ளவேண்டும்.

சரி விடுங்க..திடீர்னு எதுக்கு இந்த கார்ப்பரேட்டுகளின் கதை. கார்ப்பரேட்டு கம்பெனிகளின் அட்டகாசத்தை மக்கள் உணரத்துவங்கியிருக்கிறார்கள். மவுலிவாக்கம் சம்பவங்களை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தங்கள் கிராமங்களில் கார்ப்பரேட்டுகளின் கனரக இயந்திரங்கள் வலம்வருவதை அவர்கள் மவுனமாக பார்த்துக்கொண்டு இல்லை. அவர்களுக்கு எதிரான கோபம் ஒரு நெருப்பு உருண்டையாய் அடிவயிற்றில் சூல்கொள்ள துவங்கியிருக்கிறது. இடதுசாரி இயக்கங்களும் நம்மாழ்வார்களும் இன்னமுள்ள இயற்கை ஆர்வலர்களும் பேசும் குரல்களுக்கு கவனம் குவிக்கத்துவங்கியிருக்கிறார்கள். அந்தக்கோபம் போராட்டமாய் வெடித்துவிடக்கூடாது என்ற கார்ப்பரேட்டுகளின் கவலையைத்தான் ஒரு கை தண்ணி அள்ளி தெளித்து அணைக்க முயற்சிக்கிறார்கள்.
திருடன்..திருடன்..என கத்திக்கொண்டு வரும் கூட்டத்தை..தெருமுக்கில் நின்று..ஆமாமாம்..அதோ ஓடுறான் பாரு என திசைத்திருப்பிவிடத்தான் இப்படி ஹைடெக்காக யோசித்து படமெடுத்து இருக்கிறார்கள். மற்றபடி இதுவும் திருடனை தியாகி ஆக்கும் கதைகளில் ஒன்றுதான். என்ன இந்தமுறை விஜய் தியாகியாகி இருக்கிறார்…அவ்வளவுதான்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் விஜய்..முருகதாஸ். சர்வ சாதாரணமாக ஓர் ஆட்டோவில் போய் இறங்கி சவால்விட்டு வண்டிச்சக்கரத்து அச்சாணியில் குத்தி தீர்த்துவிடக்கூடிய அளவுக்கு கார்ப்பரேட்டுகளின் வலைப்பின்னல் ஒன்றும் அவ்வளவு சாதாரணமானதல்ல. தவிர, உங்களையும் எங்களையும் இதைச்செய்ய அனுமத்தித்துவிடும் அளவுக்கு கார்ப்பரேட்டுகள் ஒன்றும் மொன்னைகளல்ல...

நன்றி : கருப்பு கருணா 25.10.2015 முக நூலிலிருந்து 

இதில்  கார்ப்பரேட்டுகள் என சொல்லப்படுபவர்கள் யார் என்பது முந்தைய பதிவுகளை படித்தவர்கள் புரிந்து கொள்ளலாம்